

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டரில் 6.4 புள்ளிகளாகப் பதிவான இந்த பூகம்பத்தால் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. பலர் காயமடைந்தனர். ஆனால், உயிர் பலி ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
அமெரிக்காவின் சுதந்திர தினமான நேற்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், மக்கள் பெரும்பாலும் வீடுகளில் இருந்தனர். அப்போது இந்த பூகம்பம் ஏற்பட்டதால், வீடுகளில் இருந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.
இந்த பூகம்பம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து வடகிழக்கே 240 கிமீ தொலைவில் உள்ள கலிபோர்னியாவின் ரிட்ஜ்கிரெஸ்ட் நகரை மையமாகக் கொண்டு பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.4 அளவாக பூகம்பம் பதிவானது.
தெற்கு கலிபோர்னியா, நவேடாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த பூகம்பத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இதுபோன்ற நிலநடுக்கம் கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்டதில்லை என்று அமெரிக்கப் புவியியல் துறை தெரிவித்துள்ளது.
இந்த பூகம்பத்தால், ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் உள்ள இரு வீடுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஏராளமான வீடுகள், வர்த்தக மையங்கள், கடைகள் சேதமடைந்தன. கடைகளிலும், வர்த்தக மையங்களிலும் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்கள் சரிந்து விழுந்து சேதமடைந்தன. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன.
மேலும், வீடுகளுக்கு நிலத்தடியில் கொண்டு செல்லப்படும் சமையல் எரிவாயுக் குழாயிலும் பல்வேறு இடங்களில் சேதமடைந்தன. முதல் கட்டமாக அதைச் சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கெர்ன் கவுன்டி தீயணைப்புத் துறையின் தலைவர் டேவிட் விட் கூறுகையில், "இந்த நில அதிர்வால் ஏராளமான வீடுகள், கடைகள், சேதமடைந்தன. சாலைகளில் பல்வேறு இடங்களில் பிளவுகள் காணப்படுகின்றன. இந்த பூகம்பத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் தங்கியிருந்த நோயாளிகளும் பூகம்பத்தால், அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்" எனத் தெரிவித்தார்.
கெர்ன் கவுண்டியின் ஆளுநர் காவின் நியுஸம் அந்த மாநிலத்தில் உள்ள சூழலைப் பார்த்து அங்கு அவசர நிலையை அமல்படுத்தியுள்ளார். இதன் மூலம் அனைத்துவிதமான உதவிகளையும் நகராட்சிகளுக்கு மாநில அரசு உடனடியாக தீவிரமாகச் செய்யவும், மீட்புப் பணிகளைத் துரிதகதியில் செய்யவும் அவசர நிலை கொண்டுவரப்பட்டது.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் விடுத்த அறிவிப்பில், "கலிபோர்னியா நிலநடுக்கம் குறித்து கேட்டறிந்தேன். அங்கு இயல்பு நிலை திரும்பி அனைத்தும் கட்டுக்குள் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் ஜான் வில்லியம்ஸ் கூறுகையில், "பூகம்பத்தைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சாலைகளில் பிளவு ஏற்பட்டுள்ளது. சாலைகள் சரிந்துள்ளன" எனத் தெரிவித்தார்
பூகம்பத்தைத் தொடர்ந்து வரும் அதிர்வலைகளும் ரிக்டரில் 4.5 அளவாக இருந்தது என்று அமெரிக்கப் புவியியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.