

தென்கொரியாவில் சிவோல் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது தொடர்பான வழக்கில், அதன் கேப்டன் லீ ஜுன் சியோக்குக்கு 36 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்கொரியாவின் இன்சியோனிலிருந்து ஜெஜு நோக்கிச் சென்ற எம்.வி.சிவோல் கப்பல் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 300 பேர் உயிரிழந்தனர். கவனக்குறைவாக செயல்பட்டு விபத்துக்கு காரணமாக இருந்ததாக கேப்டன் லீ ஜுன் சியோக் மற்றும் அவரின் கீழ் பணிபுரிந்த ஊழியர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. லீ ஜுன் சியோக் மீது கொலைக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை குவான்ஜு நகர நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதி லிம் ஜூங் யூப் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது: “லீ ஜுன் சியோக் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளார். அவர் தனது கடமையிலிருந்து தவறியுள்ளார். பயணிகள் ஆபத்தில் இருந்த போது, கடைசிவரை கப்பலில் இருந்து, அவர்களை காப்பாற்ற முயற்சித்திருக்க வேண்டும். ஆனால், கப்பல் மூழ்கத் தொடங்கியதும், அதை கைவிட்டுவிட்டு, அவரும், அவரின் கீழ் பணிபுரிந்த ஊழியர்களும் தப்பியுள்ளனர்.
இக்குற்றச்சாட்டுகள் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதால், அவருக்கு 36 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறோம். எனினும், அவர் பயணிகளை கொலை செய்யும் வகையில் நடந்து கொண்டார் என்று கூறுவதற்கு போதிய ஆதாரமில்லை. அக்குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். கப்பலில் பணிபுரிந்த மேலும் 3 அதிகாரிகளுக்கு 15 முதல் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.