Last Updated : 04 Jul, 2019 05:23 PM

 

Published : 04 Jul 2019 05:23 PM
Last Updated : 04 Jul 2019 05:23 PM

சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் இலங்கையில் கடும் பொருளாதார சரிவு

இலங்கையில கடந்த ஆண்டு ஜூனில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 21 -ம் தேதி அன்று ஈஸ்டர் பண்டிகையின்போது ஹோட்டல், சர்ச் தாக்குதல்களுக்குப் பிறகு இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை கடுமையாக குறைந்துள்ளது.

இதுகுறித்து சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மாதம் இலங்கைக்கு 63,072 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஜூனில் 146,828 ஆக இருந்தது. ஜூன் 2018 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 57% வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அதிக எண்ணிக்கையில் வருவது வழக்கம்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான வருகை 1,008,449 ஆகும், சென்ற ஆண்டு முதல் ஆறுமாதம் 1,164,647 பார்வையாளர்கள் வந்ததை ஒப்பிடும்போது 13.4% குறைந்துள்ளது.

கடந்த, ஏப்ரல் 21 அன்று ஏழு தற்கொலைப்படையினர் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்களை தாக்கினர். இந்தத் தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அரசு குழு பொறுப்பேற்றது, அவை தேசிய தவ்ஹீத் ஜமாத் என்று அழைக்கப்படும் உள்ளூர் தீவிரவாத அமைப்பால் நடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

 St-Anthonys-Shrinejpgகடந்த ஏப்ரல் 21 அன்று ஈஸ்டர் பண்டிகையின்போது தாக்குதல் நடந்த இலங்கை செயின்ட் ஆண்டனி தேவாலயம்.100

இந்த குண்டுவெடிப்பில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இதில் முக்கியமாக சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்தவர்களின் உயிரிழப்புகள் அதிகம்.

வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புதல், ஜவுளி ஏற்றுமதி ஆகிய இரண்டுக்கும் அடுத்தபடியாக இலங்கையின் மூன்றாவது வெளிநாட்டு பணம் ஈட்டும் பெருமைக்குறியதாக இலங்கை சுற்றுலாத்துறை இருந்தது.

சுற்றுலாவை நம்பியுள்ள 5 லட்சம் பேர்

கடந்த ஆண்டு இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9% சுற்றுலாத்துறையின் வருமானமே முக்கிய பங்காற்றியது. கடந்த ஆண்டு 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டதன் மூலம் 4.4 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது முக்கிய காரணம் ஆகும். 2017 ல் இருந்து கிட்டத்தட்ட 12% உயர்வுபெற்ற தொகை இது.

இலங்கையில் சுமார் அரை மில்லியன் மக்கள் அதாவது 5 லட்சம்பேர் நேரடியாக சுற்றுலாவை நம்பியிருக்கிறார்கள், 2 மில்லியன் பேர் அதை மறைமுகமாக நம்பியுள்ளனர்.

இந்த ஆண்டு சுற்றுலாவில் இருந்து 5 பில்லியன் டாலர் வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்க்கிறது, ஆனால் குண்டுவெடிப்புக்குப் பிறகு, வருவாய் 3.7 பில்லியன் டாலராகக் குறையும் என்று அது கூறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x