Last Updated : 06 Jul, 2019 10:38 AM

 

Published : 06 Jul 2019 10:38 AM
Last Updated : 06 Jul 2019 10:38 AM

அமெரிக்காவில் தொடர்ந்து 2-வது நாளாக சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தொடர்ந்து 2-வது நாளாக 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்டது.

இது ரிக்டரில் 7.1 அளவாக பதிவானதாக அமெரிக்க புவியியல் துறை தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை நிகழ்ந்த பூகம்பத்தில் ரிக்டரில் 6.4 புள்ளிகளாக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2 நாளாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

தெற்கு கலிபோனியாவில் உள்ள ரிட்ஜர்கிரெஸ்ட் நகரில் இருந்து  15 மைல் தொலைவில் நேற்று இரவு 8.30 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வியாழக்கிழமை அன்று இதேபகுதியில்தான் பூகம்பம் ஏற்பட்டது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக சக்திவாய்ந்த நிலஅதிர்வாக பார்க்கப்டுகிறது.

வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பூகம்பத்துக்கு பிந்திய நிலஅதிர்வுகள் 200 முறை நடந்துள்ளதாக அமெரிக்க புவியியல் துறையினர் தெரிவிக்கின்றனர். அடுத்து வரும் நாட்களிலும் அதிகமான நில அதிர்வு இருக்கும் என எச்சரித்துள்ளனர்.

வியாழக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால், இரு வீடுகளில் தீவிபத்து ஏற்பட்டன, கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள்  சேதமடைந்தன, ஏராளமானோர் காயடைந்தனர். ஆனால், உயிர்பலி ஏதும் ஏற்படவில்லை. நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் பிளவு ஏற்பட்டது. பூமிக்கு அடியில் செல்லும் எரிவாயு குழாயிலும் உடைப்பு ஏற்பட்டதால் அதை சரி செய்யும் பணியில் அவசரமாக ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அதேபோலத்தான் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்திலும் அதிகமான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகத்தான் முதல்கட்டத் தகவல் தெரிவிக்கின்றன, ஆனால் உயிர்பலி ஏதும் இல்லை. ஆனால், வரும் நாட்களில் அதிக சக்தியுள்ள நிலநடுக்கம் ஏற்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க புவியியல் துறை விடுத்த எச்சரிக்கையில் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள்.

ரிட்ஜர்கிரெஸ்ட் நகர மேயர் பெக்கி பிரீடன் கூறுகையில், " ரிட்ஜ்ர்கிரெஸ்ட் நகரில் ஏராளமானவீடுகள், கடைகள் பூகம்பத்தால் சேதமடைந்துள்ளன. அவற்றுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், கவலையில்லை. பூகம்பத்தில் ஒருவருக்கும் உயிரிழப்பு இல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது. நேற்று நிகழ்ந்த நிலநடுக்கத்தின் சேதங்கள் குறித்து கணக்கிட்டு வருகிறோம் " எனத் தெரிவித்தார்.

கடைசியாக கடந்த 1994-ம் ஆண்டு தெற்கு கலிபோர்னியாவில் நார்த்ரிட்ஜ் பகுதியில் ரிக்டரில் 6.6 ஆக பதிவான நிலஅதிர்வில், 57 பேர் கொல்லப்பட்டனர். இதுதான் நிலஅதிர்வில் கலிபோர்னியா பகுதியில் அதிகபட்சமாக ஏற்பட்டஉயிர்சேதமாகும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x