

அகதிகள் வந்த படகு துனிசியா கடல் பகுதியில் கவிழ்ந்ததில் 80 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து ஊடகங்கள், “லிபியாவிலிருந்து ஆப்பிரிக்க அகதிகள் வந்த படகு, துனியா கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் 80 பேர் பலியானதாக நம்பப்படுகிறது.
இதில் துனிசிய மீனவர்களால் நான்கு பேர் காப்பாற்றப்பட்டனர். இதில் ஒருவர் மருத்துவமனையில் பலியானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பாற்றப்பட்டவர்களில் ஒருவர் பேசும்போது, ”நாங்கள் நான்கு பேர் மரத் துண்டின் மீது மிதந்து வந்தோம். அலைகள் எங்களைத் தாக்கின. நாங்கள் தொடர்ந்து இரண்டு நாட்கள் இம்மாதிரியே கடலில் வந்தோம். எங்களுடன் வந்த பலர் மரணம் அடைந்தனர்” என்றார்.
எகிப்து புரட்சியைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு லிபியக் கிளர்ச்சியின்போது, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கின. இதில், 34 ஆண்டுகள் லிபிய அதிபராக இருந்த கடாபி கொல்லப்பட்டார்.
அதன்பின், ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்காலப் பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. ஆனால், அதன்பின் லிபியாவில் குழப்பம் ஏற்பட்டது. ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் லிபியாவில் போட்டி நாடாளுமன்றங்களை ஏற்படுத்தி இரு பிரிவாக அரசாட்சி செய்து வருகின்றனர்.
இதில் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வரும் மக்கள், தீவிரவாதத் தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்காக துனிசியா போன்ற நாடுகளுக்கு அம்மக்கள் பயணிக்கின்றனர்.