

ஆப்கானிஸ்தானின் கஸ்னி நகரில் இன்று நடைபெற்ற தற்கொலைப் படையினரின் சக்திவாய்ந்த கார் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் 80 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணுவ தளம் ஒன்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படையினரின் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு ஆப்கனைச் சேர்ந்த தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
இதுகுறித்து கஸ்னி மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் ஆரிஃப் நூரி, எஃபே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
''இன்று காலை 8.30 மணியளவில் கஸ்னி நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் உள்ளூர் தளத்திற்கு அருகில் இந்த தாக்குதல் நடந்தது. இந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 8 பாதுகாப்பு வீரர்கள், பொதுமக்களில் 4 பேர் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் காயடைந்துள்ள 80 பேரில் பெரும்பாலோர் பள்ளி மாணவர்கள். அவர்களில் பெரும்பாலோனோர் மாகாண மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.''
பலத்த காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் கவலைக்கிடமான நிலையில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளநிலையில் அங்கிருந்து வரும் முடிவுகளின்படி இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. எனவே வரவிருக்கும் மணிநேரங்களில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
இவ்வாறு கஸ்னி மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தாக்குதலுக்கு பொறுப்பேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
வாகனத்தால் பரவும் மேம்பட்ட வெடிக்கும் சாதனத்தைப் பயன்படுத்தி உயிர்த் தியாகம் செய்து தாக்குதல் நிகழ்த்த தயாராக இருந்த ஒருவரின் மூலம், கஸ்னி நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் முக்கிய தளம் குறிவைக்கப்பட்டது.
எங்கள் ஆரம்ப தகவல்களின்படி, இந்த தளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது மற்றும் இருபது அல்லது முப்பது என்.டி.எஸ் படைகள் மற்றும் ஊழியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்."
இவ்வாறு முஜாஹித் கூறினார்.
இந்த கொடிய தாக்குதல் நடந்துள்ள இதேநாளில் கட்டாரில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு உறுப்பினர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவுக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற மற்றும் தனிப்பட்ட ஆர்வத்தில் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், அதே நேரத்தில் கத்தாரில் அமெரிக்காவுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தைகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் குறித்து கிளர்ச்சியாளர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர், இப்பேச்சு வார்த்தையில் முக்கியமாக, அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறுதல் மற்றும் ஆப்கான் மண்ணை அடிப்படையாகக் கொண்டு எந்த பயங்கரவாதக் குழுவும் மற்றொரு நாட்டை தாக்காது என்ற தலிபான்களின் வாக்குறுதியை மையமாகக் கொண்டுள்ளது.