

ஜி20 உச்சமாநாட்டின் 2-ம்நாளான இன்று இந்தோனேசிய அதிபர், பிரேசில் அதிபர் ஆகியோருடன் தனித்தனியே பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது இருதரப்பு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துதல், வர்த்தகம், மற்றும் முதலீட்டில் கூட்டுறவை மேம்படுத்துதல் குறித்து பேசப்பட்டது.
ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி 20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இரு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வியாழக்கிழமை ஜப்பான் சென்றடைந்தார்.
அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜி20 மாநாட்டின் முதல் நாளான நேற்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜிங்பிங், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரை நேற்று தனித்தனியே சந்தித்த பிரதமர் மோடி அவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும், பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களுடன் அதிகாரபூர்வமற்ற முறையில் சந்தித்து பிரதமர் மோடி பேசினார்.
இந்நிலையில் ஜி20 மாநாட்டின் 2-வது நாளான இன்று , இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரோ ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேச்சு நடத்தினார். அதிகாரபூர்வமாக பிரதமர் மோடி இரு தலைவர்களையும் முதல்முறையாகச் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறுகையில் " ஜி20 மாநாட்டின் 2-வது நாளான இன்று பிரதமர் மோடி, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுடன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் மூலம் இரு தரப்பு உறவுகள் ஆழமாகும் " எனத் தெரிவிக்கப்பட்டது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் ட்விட்டரில் கூறுகையில், " முழுமையான ராஜதந்திர கூட்டுறவை முன்னெடுத்துச் செல்லும் சந்திப்பு நிகழ்ந்தது. இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுடன் பிரதமர் மோடியின் சந்திப்பு மிகுந்த ஆக்கப்பூர்வமாக அமைந்தது.
வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, விண்வெளி, கடற்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் கூட்டுறவை, ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது குறித்தும், இந்தோ-பசிபிக் கடல்பகுதி குறித்தும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர் " எனத் தெரிவித்துள்ளார்.
பிரேசில் அதிபர் ஜேர் போல்சோநாரோவுடன் பிரதமர் மோடி தனியே சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத்து அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் ட்விட்டரில் கூறுகையில், " பிரேசில், இந்தியா இடையிலான ராஜாங்க உறவுகள் நெருக்கமாக வருவதற்கான சந்திப்பு நடந்தது.
பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் ஜேர் போல்சனோரோ சந்திப்பின்போது, பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, இரு தரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு, வேளாண்மை, பயோ எரிபொருள், பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்பட ஆலோசிக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.