மோடி எவ்வளவு அருமையானவர்: ஆஸி.பிரதமர் செல்ஃபி எடுத்து புகழாரம்

மோடி எவ்வளவு அருமையானவர்: ஆஸி.பிரதமர் செல்ஃபி எடுத்து புகழாரம்
Updated on
1 min read

பிரதமர் மோடி அருமையானவர் என்று ஜி20 மாநாட்டின் இடையே பிரதமர் மோடியைச் சந்தித்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் செல்ஃபி எடுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி 20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இரு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வியாழக்கிழமை  ஜப்பான் சென்றடைந்தார்.

அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜி20 மாநாட்டின் முதல் நாளான நேற்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜிங்பிங், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரை நேற்று தனித்தனியே சந்தித்த  பிரதமர் மோடி அவருடன்  பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும், பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களுடன் அதிகாரபூர்வமற்ற முறையில் சந்தித்து பிரதமர் மோடி பேசினார்.

இந்நிலையில் ஜி20 மாநாட்டின் 2-வது நாளான இன்று , இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, பிரேசில் அதிபர்  ஜேர் போல்சோனாரோ ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேச்சு நடத்தினார். அதிகாரபூர்வமாக பிரதமர் மோடி இரு தலைவர்களையும் முதல்முறையாகச் சந்தித்து பேசினார்.

இந்த மாநாட்டின் இடையே ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஸ்காட் மோரிஸனை சந்தித்து பிரதமர் மோடிபேசினார். அப்போது இரு தலைவர்களும் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இந்த செல்ஃபி புகைப்படத்தை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, " பிரதமர் மோடி எவ்வளவு அருமையானவராக இருக்கிறார்(கித்னா அச்சா ஹே மோடி) " எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்காட் மோரிஸன் 2-வது முறையாக வெற்றி பெற்று பிரதமராக தேர்வாகினார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறையாக மோடியும் பிரதமராக தேர்வாகியுள்ளார். இரு தலைவர்களும் தங்கள் வெற்றிக்கு கடந்த மாதம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in