Last Updated : 30 Jun, 2019 02:33 PM

 

Published : 30 Jun 2019 02:33 PM
Last Updated : 30 Jun 2019 02:33 PM

புதிய வரலாறு: வடகொரிய எல்லைக்குள் காலடி வைத்து அதிபர் ட்ரம்ப், கிம் ஜாங்குடன் சந்திப்பு

வடகொரிய எல்லைப்பகுதிக்குள் நடந்து சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னைச் சந்தித்து கைகுலுக்கிபேசினார்.

1950-53-ம் ஆண்டு நடந்த கொரியப் போருக்குப்பின், இதுவரை எந்த அமெரிக்க அதிபர்களும் கொரிய மண்ணுக்குள் சென்றதில்லை. இப்போது 69 ஆண்டுகளுக்குப்பின் அதிபர் ட்ரம்ப் சில அடிகள் வடகொரிய எல்லைக்குள் நடந்து சென்று கிம்முடன் கைகுலுக்கி  வரலாறு படைத்தார்.

வடகொரியாவும், தென் கொரியாவும் பிரிக்கப்படும் ஆயுதம் விலக்கப்பட்ட பகுதியில் இரு நாட்டு அதிபர்களும் சந்தித்து கைகுலுக்கி பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர்

ஐ.நாவின் எச்சரிக்கையையும் மீறி வடகொரிய அதிபர் கிம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ஹைட்ரஜன் குண்டுகள், அணுகுண்டுகள் ஆகியவற்றை சோதனை செய்து கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வந்தார். இதனால், அந்நாட்டின் மீது அமெரிக்க பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் அவ்வப்போது அறிக்கைகை வெளியிட்டு வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது.

இந்த சூழலில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் முயற்சியால் வடகொரியா அதிபர் கிம்மும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் சந்தித்து அமைதிப் பேச்சில் ஈடுபட சம்மதித்தனர். இதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம்  சிங்கப்பூரில் இருவரும் முதல் முறையாக சந்தித்து அமைதிப் பேச்சில் ஈடுபட்டனர். இந்த சந்திப்புக்குப்பின், இரு நாடுகளுக்கு இடையை நிலவி வந்த பதற்றமான சூழல் தணிந்தது. வடகொரியாவும் அணு ஆயுதங்களை சோதனை செய்வதை கைவிட்டது.

இதற்கு அடுத்தார்போல் நிரந்தரமாக இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் வியட்நாமில் கடந்த பிப்ரவரி மாதம் பேச்சு நடத்த இரு தலைவர்களும் முடிவு செய்திருந்தனர். ஆனால், திடீரென பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில் ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பானின் ஒசாகா நகருக்கு அதிபர் ட்ரம்ப் சென்றிருந்தார். அப்போது அந்த மாநாட்டில் இருந்தவாரே அதிபர் ட்ரம்ப் , வடகொரிய அதிபர் கிம்முக்கு ட்விட்டரில் செய்தி அனுப்பினார் அதில், " ஜி20 மாநாட்டை முடித்து எனது நாட்டுக்கு திரும்பும் முன், வடகொரிய அதிபர் கிம் ஜாங் நாட்டில் இருந்தால், அவரைச் சந்தித்து கைகுலுக்கி ஒரு ஹலோ சொல்வேன் " எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு வடகொரியாவும் சம்மதம் தெரிவித்து, அதிபர் ட்ரம்புக்கு பதில் அளித்தது. இதையடுத்து வடகொரியா, தென் கொரியாவை பிரிக்கும் ஆயுதம் விலக்கப்பட்ட பகுதியில்  அதிபர் கிம்மும், அதிபர் ட்ரம்பும் சந்திக்க முடிவு செய்தனர்.

இதன்படி, இன்று தனிவிமானம் மூலம் ஜப்பானில் இருந்தவாறு வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய எல்லைப்பகுதியான ஆயுதம் விலக்கப்பட்ட பான்முன்ஜன் பகுதியில் உள்ள ட்ரூஸ் கிராமத்துக்கு வந்தார். வடகொரிய எல்லைக்குள் அதிபர் கிம் ஜாங் உன் இருந்தார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைப் பார்த்ததும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சில அடிகள் வடகொரிய எல்லைக்குள் நடந்து சென்று கிம்முக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அதன்பின் இருதலைவர்களும் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் சேர்ந்துகொண்டனர். அதன்பின் அதிபர் ட்ரம்ப், அதிபர் கிம் ஜாங் உன் இருவரும் பேச்சுநடத்தினார்கள்.

இந்த சந்திப்பு குறித்து அதிபர் ட்ரம்ப் நிருபர்களுக்கு அளி்த்த பேட்டியில் " உலகத்துக்கே இன்று மிகச்சிறப்பான நாள். இந்த இடத்தில் நான் நிற்பது எனக்கு மிகப் பெருமையாகவும், கவுரவமாகவும் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x