காங்கோ சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 43ஆக அதிகரிப்பு

காங்கோ சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 43ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

காங்கோவில்  சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 43 சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகினர்

மத்திய ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் கடந்த வியாழன் அன்று இந்த மாபெரும் சுரங்க விபத்து நடந்துள்ளது.

இங்குள்ள கொல்வெஸி பகுதியில் சுவிஸ் நிறுவனமான க்ளென்கோரின் துணை நிறுவனமான காமோட்டோ காப்பர் கம்பெனி (கே.சி.சி) இந்த சுரங்கத்தை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழன் அன்று விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை 19 என்று க்ளென்கெர் நிறுவனம் தனது ஆரம்பகட்ட விபத்து அறிவிப்பின்போது தெரிவித்தது, ஆனால் ஒரு அறிக்கையில் "மேலும் உறுதிப்படுத்தப்படாத மரணங்கள் ஏற்படக்கூடும்" என்று குறிப்பிட்டது.

பின்னர் சரியான எண்ணிக்கை குறித்த விவரங்களை க்ளென்கெர் இன்னும் தெளிவாகத் தெரிவிக்கவில்லை.

இந்த விபத்தில் 43 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக லுவாலாபா மாகாண ஆளுநர் ரிச்சர்ட் முயேஜ் வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

80 பேர் வரை உயிரிழந்திருக்கலாம்

ஆனால் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சில சிவில் குழுக்கள் 60 முதல் 80 பேர் வரை இறந்திருக்கக் கூடும் என்று கூறியுள்ளது எண்ணிக்கையை இன்னும் அதிகமாக்குகின்றன.

சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பெருகி வருவதை கே.சி.சி கவனித்ததாக க்ளென்கோர் கூறியிருந்தது.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் சட்டவிரோத சுரங்கங்கள் மிகவும் சாதாரணமாக உள்ளன. இப்பகுதியில் தாமிரம் மற்றும் கோபால்ட் கனிமங்கள் நிறைந்துள்ளதால் சட்டவிரோத சுரங்கங்களுக்கு பஞ்சமில்லை. அதனால் அடிக்கடி ஆபத்துமிகுந்த உயிரிழப்புகள் ஏற்படுகின்றன, அங்கு பாதுகாப்பு பெரும்பாலும் மோசமாக உள்ளதால் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in