Published : 10 Aug 2017 10:29 AM
Last Updated : 10 Aug 2017 10:29 AM

உலக மசாலா: ஃப்ரூட்டேரியன் டயட்!

ங்கிலாந்தைச் சேர்ந்த 21 வயது டேன் நாஷ், தனக்குத் தேவையான 80% கலோரிகளை வாழைப்பழத்திலிருந்தே பெற்றுக்கொள்கிறார். ஒரு வாரத்துக்கு 150 மஞ்சள் வாழைப்பழங்களைச் சாப்பிடுகிறார். மருத்துவர்கள் இது முறையற்ற உணவுப் பழக்கம் என்று எச்சரித்தாலும் இவர் பொருட்படுத்தவில்லை. “வாழைப்பழத்தை மட்டும் சாப்பிடுவதால் என் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க வைக்கிறது. எனக்குச் சில உடல் நலப் பிரச்சினைகள் இருந்தன. முதலில் சைவ உணவுக்கு மாறினேன். அப்போதும் என் பிரச்சினை சரியாகவில்லை. அதற்குப் பிறகு வீகன் உணவுக்கு மாறினேன். இரண்டு ஆண்டுகள் கடைபிடித்த அந்த உணவுப் பழக்கத்திலும் எனக்குப் பிரச்சினைகள் இருந்தன. இறுதியாக நானே பலவற்றையும் தேடிப் படித்தேன். ஆராய்ச்சி செய்தேன். இறுதியில் வாழைப்பழ உணவு முறைக்கு மாறினேன். நம்மைத் தவிர மற்ற விலங்குகளும் பறவைகளும் இயற்கையான உணவுகளை அப்படியே சாப்பிடுகின்றன. நாம் மட்டும்தான் சமைத்து உண்கிறோம். அதனால் சமைக்கப்படாத இயற்கையான உணவு முறைக்கு மாறிவிட்டேன். காலையில் 12 வாழைப்பழங்களுடன் கீரைகளைச் சேர்த்து அரைத்து, குடித்துவிடுவேன். மதியம் 8 வாழைப்பழங்களுடன் வேறு சில பழங்களைச் சேர்த்து அரைத்து, குடிப்பேன். மாலையில் வாழைப்பழங்களுடன் பருப்புகள், உலர் பழங்களைச் சேர்த்துச் சாப்பிடுவேன். இதனால் என் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்துவிடுகின்றன. இந்த உணவுப் பழக்கத்தின் மூலம் ஒருநாளைக்கு 3 ஆயிரம் கலோரிகளைப் பெற்றுவிடுகிறேன். இப்போது எனக்கு எந்த உடல்நலக் கோளாறும் இல்லை. வாழைப்பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடியது. விலையும் குறைவானது. அதிகச் சத்துகளும் நிறைந்தது. இந்த உணவுப் பழக்கத்தை யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். எனக்கு இது ஒத்துவருகிறது” என்கிறார் டேன் நாஷ். இவரது வாழைப்பழ உணவுப் பழக்கத்தில் மனிதர்களுக்குத் தேவையான சத்துகள் விடுபட்டுள்ளன, எனவே இதைப் பின்பற்ற வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஃப்ரூட்டேரியன் டயட்!

மெரிக்காவின் ஃப்ளோரிடாவில் வசிக்கும் ஆஷ் ரூய்ஸ், தன்னுடைய பாட்டியின் 98-வது பிறந்தநாளுக்காக, பாட்டிக்குப் பிடித்த பாடலைப் பாடினார். அதைக் கேட்டு பாட்டி மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. “ஒவ்வொரு வருடமும் பாட்டியின் பிறந்தநாள் அன்று இந்தப் பாடலைத் தொலைபேசி, ஸ்கைப் வழியே பாடுவேன். இந்தப் பிறந்தநாளுக்குத்தான் நேரில் பாடுகிறேன். பாட்டி மிகவும் அழகாக வெல்வெட் குரலில் பாடக்கூடியவர். என்னுடைய 8 வயதில் அவருக்குப் பிடித்த பாடல்களைச் சொல்லிக் கொடுத்து, தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் பாடும்படிக் கேட்டுக்கொண்டார். நானும் அன்று முதல் இன்றுவரை பாடிக்கொண்டிருக்கிறேன். இந்தப் பாடல் மூலம் அவருடைய கடந்த கால இனிமையான பொழுதுகள் நினைவுக்கு வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக அவரால் பாட முடியாமல் போய்விட்டது. இந்த ஆண்டு உடல்நலம் மோசமாகிவிட்டது. தன்னுடைய நூற்றாண்டு அனுபவங்களையும் இந்தப் பாடல் மூலம் நினைத்துப் பார்த்திருப்பார். இதைவிட பாட்டிக்கு வேறு என்ன பிறந்தநாள் பரிசு கொடுத்துவிட முடியும்?” என்கிறார் ஆஷ் ரூய்ஸ்.

பாட்டிக்குப் பரிசு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x