Published : 19 Aug 2017 10:10 AM
Last Updated : 19 Aug 2017 10:10 AM

உலக மசாலா: அசத்துகிறார்கள் ஜப்பானியர்கள்!

ப்பானியர்களுக்கு ரோ போட் தொழில்நுட்பம் மீது ஆர்வம் அதிகம். சமீபத்தில் ஒரு சோளக் கொல்லை பொம்மை ரோபோட்டை ஓநாய் வடிவத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். சிவப்புக் கண்களும் கோரைப் பற்களுமாகக் காட்சி தரும் இந்த ஓநாய் கத்தினால், பறவைகள் மட்டுமின்றி, மனிதர்களே அலறி ஓடிவிடுவார்கள். “நான் சின்ன வயதில் வயல்களில் சோளக் கொல்லை பொம்மைகளைப் பார்த்திருக்கிறேன். பறவைகள், காட்டு விலங்குகளை விரட்டி, பயிர்களைக் காப்பாற்றுவதற்காக வைத்திருப்பார்கள். சிலர் அவற்றில் விளக்கு, மணிகள்கூட இணைத்திருப்பார்கள். இவையெல்லாம் ஓரளவு பறவைகளையும் விலங்குகளையும் விரட்டுவதற்கு உதவின. ஆனால் இன்று பல துறைகளிலும் தொழில்நுட்பங்களின் உதவியால் முன்னேற்றம் வந்துவிட்டது. சோளக் கொல்லை பொம்மையை மட்டும் ஏன் இன்னும் அப்படியே பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்று யோசித்தேன். அதன் விளைவாக சூப்பர் ரோபோட் ஓநாய் உருவாக்கிவிட்டோம். பறவைகள், மான்களிலிருந்து கரடிகள் வரை அனைத்தும் ரோபோட் ஓநாயைக் கண்டு ஓட்டமெடுக்கின்றன” என்கிறார் ஹொக்கைடோ ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர். சமீபத்தில் இந்த ஓநாய் ரோபோட்டை விவசாயக் கூட்டுறவு சங்கம் ஒன்று வாங்கி, பரிசோதனை செய்துபார்த்தது. நினைத்ததைவிட இது சிறப்பாக வேலை செய்வதாகச் சொல்லியிருக்கிறது. தூரத்தில் வரும் பறவைகள், விலங்குகளைக் கூட கண்டுபிடிக்கும் அளவுக்கு மிகச் சிறந்த தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஏதாவது உருவங்கள் அருகே வந்தால் கண்களில் சிவப்பு விளக்குகள் எரிகின்றன. தலை வலப் பக்கமும் இடப் பக்கமும் நகர்கிறது. 40 வகையான ஒலிகளை எழுப்புகிறது. இதில் பல்வேறு விலங்குகளின் குரல்களிலிருந்து மனிதனின் குரல் வரை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் சப்போரோ தாவரவியல் பூங்காவில் ஓர் ஓநாய் ரோபோட் வைக்கப்பட்டது. காட்டு விலங்குகள் உணவு தேடி, பூங்காவுக்கு வரும்போது செடிகளையும் மரங்களையும் பாழ்படுத்திக் கொண்டிருந்தன. ஆனால் இப்போது 90% பிரச்சினைகள் குறைந்துவிட்டன. விவசாயிகள் பெரிய அளவில் ரோபோட் ஓநாய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 1,15,000 ரூபாய்க்கு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வருகிறது.

அசத்துகிறார்கள் ஜப்பானியர்கள்!

தெ

ன்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கெவின் ரிச்சர்ட்சன், சுற்றுச்சூழல் ஆர்வலர். விலங்குகள் நிபுணர். தாயால் கைவிடப்பட்ட 2 சிங்கக் குட்டிகளை எடுத்து, வளர்த்துவருகிறார். மெக், ஆமி என்ற இந்த இரண்டு சிங்கங்களும் பெரிதாக வளர்ந்துவிட்டன. தற்போது கெவின் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். தண்ணீருக்குள் நிற்கும் கெவின், சிங்கத்தைப் பார்த்து என்னைப் பிடிக்க முடியுமா என்று கேட்கிறார். சிங்கம் அவரையே உற்றுப் பார்க்கிறது. பிறகு ஓர் இரையைப் பிடிப்பதுபோல் இரண்டு கால்களையும் தூக்கிக்கொண்டு கெவின் மீது பாய்கிறது. பார்ப்பவர்கள் பயத்தில் உறைந்துவிடுகிறார்கள். ஆனால் சிங்கம் கெவின் தோள்களைப் பற்றி, அணைத்துக்கொள்கிறது. ”இந்தச் சிங்கங்களைக் காட்டுக்குள் மற்ற விலங்குகளுடன் விட்டுவிட்டால், இப்போதிருப்பதை விட சிறந்த வாழ்க்கை கிடைக்கும். ஆனால் சிங்கங்கள் வேட்டை தீவிரமாக நடப்பதால் என்னால் இவற்றைக் காடுகளில் விட மனமில்லை. இவ்வளவு அன்பான சிங்கங்களை வாழ அனுமதிப்போம்” என்று வேண்டுகோள் விடுக்கிறார் கெவின் ரிச்சர்ட்சன்.

சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x