வங்கதேசத்தில் ஆளும் கட்சியின் முன்னாள் நிர்வாகிக்கு தூக்கு தண்டனை

வங்கதேசத்தில் ஆளும் கட்சியின் முன்னாள் நிர்வாகிக்கு தூக்கு தண்டனை
Updated on
1 min read

போர்க் குற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தவரும் வங்கதேச ஆளும் அவாமி லீக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருமான முபாரக் ஹுசைனுக்கு (64) அந்நாட்டு சிறப்பு தீர்ப்பாயம் தூக்கு தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளித்தது.

கடந்த 1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற சுதந்திரப் போரின்போது, ஹுசைனின் சொந்த மாவட்ட மான பிரம்மன்பரியாவில் ஆகஸ்ட் 22-ம் தேதி 33 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை சர்வதேச குற்ற தீர்ப்பாயம்-2 விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி எம்.எனயேடுர் ரஹிம் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய குழு நேற்று தீர்ப்பு வழங்கியது. ஹுசைன் மீதான 5 குற்றச்சாட்டுகளில் 2 உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர். ஒருங்கிணைந்த பாகிஸ்தா னுடன் இணைந்திருந்த வங்க தேசம் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தியது. இதனால் கடந்த 1971-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் வெடித்தது.

வங்கதேசப் பிரிவினைக்கு ஆதரவாக இப்போதைய ஆளும் அவாமி லீக் உள்ளிட்ட கட்சிகளும், எதிராக ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட கட்சிகளும் ஈடுபட்டன.

இந்தப் போரின்போது, வங்க தேசத்துக்கு சுதந்திரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்த ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் போராளிகள் குழு தளபதியாக ஹுசைன் இருந்தார். பாகிஸ் தான் அரசே வங்கமொழி பேசுபவர்களை உள்ளடக்கிய இந்தக் குழுவை உருவாக்கி போரில் ஈடுபடுத்தியது. எனினும் வங்கதேசத்துக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு ஹுசைன் அவாமி லீக் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில், 33 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதால், கடந்த 2012-ம் ஆண்டு அவாமி லீக் கட்சியிலிருந்து ஹுசைன் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in