

டோக்லாம் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்து வரும் சீனா, தற்போது அதன் ஊடகம் வாயிலாக இந்தியாவின் செய்கைகளைக் கண்டிக்கத் தொடங்கி பிரச்சாரம் செய்து வருகிறது.
சினுவா செய்தி நிறுவனம் தனது ஆங்கில வீடியோவை வெளியிட்டு அதற்கு ‘இந்தியாவின் 7 பாவங்கள்’ என்று தலைப்பிட்டு இந்தியா ‘பன்னாட்டுச் சட்டங்களை மீறுகிறது’ என்றும் எது சரி எது தவறு என்பதைக் குழப்புகிறது என்றும் சாடியுள்ளது.
மேலும் டோக்லாம் பிரச்சினையை உடனே இந்தியா முடிவுக்குக் கொண்டு வர சீனா விரைவில் இறுதிக்கெடு விதிக்கும் என்று ஊடகம் தெரிவிக்கிறது.
சினுவா நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள வீடியோவில், ‘டோக்லாம் நெருக்கடி பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதை இந்தியா வேண்டுமென்றே மதிக்காமல் நடந்து கொள்கிறது’ என்று கூறியுள்ளது.
இது குறித்து சீன அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாடு என்னவென்பது தெரியாவிட்டாலும் அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ், ஓய்வு பெற்ற சீன ராணுவத்துறையைச் சேர்ந்த ஸூ குவாங்யூ என்பவரை மேற்கோள் காட்டியுள்ளது, “சீனப் பகுதியில் இந்தியா தனது படைகளை தொடர்ந்து நிறுத்தி வந்தால் செபடம்பருக்குள் சீனா இறுதிக்கெடு அறிவிக்கலாம்” என்று கூறியுள்ளதை மேற்கோள் காட்டியுள்ளது.
அவர் மேலும் கூறியதாக காட்டப்பட்ட மேற்கோளில், “இறுதிக்கெடு விடுத்த பிறகும் இந்தியா படைகளை வாபஸ் பெறவில்லையெனில் விளைவுகளுக்கு இந்தியாவே முழு பொறுப்பாகும். சீன ராணுவம் எந்த மாதிரியான நடவடிக்கையையும் மேற்கொள்ளத் தயங்காது” என்றார்.
சினுவா வீடியோவில் ‘இந்தியாவின் 7 பாவங்கள்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி வழங்கிய போது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் இந்திய அதிகாரிகளை ‘தோல் தடித்தவர்கள்’ என்ரு வர்ணித்தார். மேலும், ‘தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்பிவிடலாம் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது’ என்றும் இந்தியாவை பகடி செய்துள்ளது.
எது எப்படியிருந்தாலும் இந்தியா டோக்லாம் எல்லையிலிருந்து படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனையில் சீனா பின் வாங்கப்போவதில்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.