Published : 31 Aug 2017 09:32 AM
Last Updated : 31 Aug 2017 09:32 AM

அமெரிக்காவில் வெள்ளத்தில் 30 பேர் பலி: இந்திய மாணவரும் உயிரிழப்பு

அமெரிக்காவில் ஹார்வி புயலுக்கு 30 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த இந்திய மாணவர் ஒருவரும் இறந்தார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த 27-ம் தேதி வீசிய புயல் மற்றும் கனமழையால் 4-வது பெரிய நகரமான ஹூஸ்டன் நகரமே தண்ணீரில் மூழ்கி உள்ளது. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத பெருமழை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கன மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை செய்ய முடியவில்லை. தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மழை மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர். ஹூஸ்டனில் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 200 மாணவர்கள் இந்திய தூதகரகத்தின் உதவியுடன் மீட்கப்பட்டனர். ஜெய்ப்பூரைச் சேர்ந்த நிகில் பாட்டியா, மற்றும் ஷாலினி சிங் ஆகியோர் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் மீட்புபடையினரால் மீட்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நிகில் பாட்டியா சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது தாயார் சுமான் பாட்டியா அமெரிக்கா சென்றுள்ளார்.

இதனிடையே, வெள்ள நிவாரணப் பணிகளுக்காக அமெரிக்காவை சேர்ந்த நடிகை சன்ட்ரா புல்லக் இந்திய மதிப்பில் ரூ.6 கோடி நிதியை நன்கொடையாக அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x