

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரம் என அந்நாட்டு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது அந்நாட்டில் சட்டவிரோதமாக குடிபெயர்ந்துள்ளவர்கள் எண்ணிக்கையில் 4 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 2009-ம் ஆண்டில் இருந்து குறையவே இல்லை என்றும் ப்யூ ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மொத்தம் ஒரு கோடியே 12 லட்சம் பேர் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவின் அண்டை நாடான மெக்ஸிகோவை சேர்ந்தவர்கள். எனினும் 2009-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2012-ம் ஆண்டில் மெக்ஸிகோ மக்கள் அமெரிக்காவுக்குள் வருவது பெருமளவில் குறைந்துள்ளது.
அமெரிக்காவில் மாகாண வாரியாக சட்டவிரோதமாக தங்கியுள்ளோர் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டது. இதில் நியூ ஹேம்ஷயர் மாகாணத்தில்தான் அதிக அளவு இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அடுத்ததாக இண்டியானா, மிக்ஸிகன், மின்னசோட்டா, நியூஜெர்ஸி, ஒஹியோ, பென்சில்வேனியா, வாஷிங்டன் ஆகிய இடங்களில் இந்தியர்கள் பெருமளவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.
ஆசியா, கரீபியன், மத்திய அமெரிக்கா ஆகிய பகுதிகளில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக வருபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஐரோப்பா, கனடா ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை ஒரே அளவில் நீடிக்கிறது.
2009-2012-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவுக்கு வந்து சட்டவிரோதமாக தங்கிவிட்டவர்களின் எண்ணிக்கையில் சீனர்கள் முதலிடத்தில் (3 லட்சம்) உள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் பிலிப்பின்ஸ் (2 லட்சம்), தென் கொரியா (1.8 லட்சம்), டொமினிகா குடியரசு (1.7 லட்சம்), கொலம்பியா (1.5 லட்சம்) ஆகிய நாடுகள் உள்ளன.