Published : 15 Aug 2017 11:02 AM
Last Updated : 15 Aug 2017 11:02 AM

அதிகரிக்கும் இனவெறி தாக்குதல்கள்: அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அச்சம்

அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் அண்மையில் நடந்த இனவெறி தாக்குதலால் அங்கு வாழும் இந்தியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 1861 முதல் 1865 வரை உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அடிமைகளின் விடுதலையை முன்னிறுத்தி ஆபிரகாம் லிங்கன் தலைமையில் ஒரு படையும், அடிமைகளை விடுதலை செய்யக் கூடாது என்பதை முன்னிறுத்தி ஜெபர்சன் டேவிஸ் தலைமையில் மற்றொரு படையும் போரில் ஈடுபட்டன. இதில் ஜெபர்சன் டேவிஸ் அணியின் படையை ஜெனரல் ராபர்ட் இ-லீ வழிநடத்தினார். இந்தப் போரில் ஆபிரகாம் லிங்கன் வெற்றி பெற்றார்.

வெர்ஜினியா மாகாணம் சார்லோட்டஸ்வில்லேவில் ஜெனரல் ராபர்ட் இ-லீ-யின் சிலை உள்ளது. அந்த சிலையை அகற்ற நகர நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரி குழுக்கள் கடந்த சனிக்கிழமை சார்லோட்டஸ்வில்லேவில் பேரணி நடத்தினர். அதேநேரம் இன ஒற்றுமையை வலியுறுத்தும் குழுவினரும் அதே பகுதியில் கூடினர். இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் வலதுசாரி குழுவைச் சேர்ந்த ஜேம்ஸ் அலெக்ஸ் என்பவர் எதிரணி கூட்டத்தில் காரை மோதினார். இதில் ஒரு பெண் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிபர் டொனால்டு ட்ரம்பும் பெயரளவுக்கு மட்டுமே கண்டனம் தெரிவித்தார். ஆனால் வலதுசாரி குழுக்கள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

வெர்ஜினியாவில் பதற்றம்

இந்த தாக்குதல்களால் வெர்ஜினியா மாகாணத்தில் வாழும் இந்தியர்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த வெங்கடராமன் கூறியதாவது: இதுபோன்ற இனவெறி தாக்குதல் இங்கு வாழும் இந்தியர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்திய மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர். சார்லோட்டஸ்வில்லே தாக்குதலில் எனது மகளின் தோழிகள் பலத்த காயமடைந்துள்ளனர். வெர்ஜினியா மாகாணம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x