Published : 17 Aug 2017 10:15 AM
Last Updated : 17 Aug 2017 10:15 AM

300 மடங்கு அதிவேக வை-பை தொழில்நுட்பம்: விநாடிக்கு 3 திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யலாம்

இப்போது உள்ளதைவிட 300 மடங்கு அதிவேகம் கொண்ட கம்பியில்லா இணையதள இணைப்பு தொழில்நுட்ப வசதி (வை-பை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ஒரு விநாடிக்கு 3 திரைப்படங்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.

இதுகுறித்து ஆராய்ச்சி குழுவின் தலைவரும் நெதர்லாந்தில் உள்ள ஈந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியருமான டான் கூனென் கூறியதாவது:

புதிதாக ‘அகச்சிவப்பு வை-பை’ என்ற பெயரில் கம்பியில்லா இணையதள இணைப்பு தொழில்நுட்ப வசதியை கண்டுபிடித்துள்ளோம். அதாவது ஒளிக் கதிர்களைப் பயன்படுத்தி கம்பியில்லாமல் தகவலை பரிமாற்றம் செய்யலாம். ஒவ்வொரு கதிரும் அதிவேக திறனுடன் செயல்படும். ஆப்டிகல் பைபர் செய்யும் பணியைத்தான் இதுவும் செய்கிறது.

இதன்மூலம் விநாடிக்கு 112 ஜிகாபைட் தகவலை பரிமாற்றம் செய்ய முடியும். அதாவது 3 முழு நீள எச்.டி. திரைப்படங்களை ஒரு விநாடியில் பதிவிறக்கம் செய்யலாம். அதாவது இப்போதுள்ள வேகத்தைவிட 300 மடங்கு அதிகம் ஆகும்.

இந்த தொழில்நுட்பத்தின் கீழ் உருவாகும் அகச்சிவப்பு அலைகளால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது. எனவே, பயன்படுத்துவதற்கு மிகவும் பாதுகாப்பானது. இதுதவிர மேலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

இந்த புதிய தொழில்நுட்பத்தை 5 ஆண்டுகளில் பரவலாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அதற்காக நிதியுதவி தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x