Published : 16 Aug 2017 10:02 AM
Last Updated : 16 Aug 2017 10:02 AM

உலக மசாலா: வெஸ்லி தி கிரேட்!

சிங்கப்பூரைச் சேர்ந்த 38 வயது வெஸ்லி வீ, மூளை வாதத்துடன் பிறந்தார். உடலிலுள்ள பெரும்பாலான தசைகளை அவரால் கட்டுப்படுத்த இயலாது. சக்கர நாற்காலியில்தான் வாழ்க்கை. சுயமாக ஆடை அணியவோ, உணவு அருந்தவோ இயலாது. எழுதுவது என்பது அவரைப் பொருத்தவரை சாத்தியமில்லாத விஷயம். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் வலது கால் பெருவிரல் மூலம் ஒவ்வோர் எழுத்தாக டைப் செய்து, ஒரு புத்தகத்தை எழுதி முடித்துவிட்டார் வெஸ்லி! குறைபாட்டுடன் பிறந்தவருக்கு அவரது பெற்றோர் ஆதரவாக இல்லாதது இன்னொரு கொடுந்துயரம். ‘இப்படி இருப்பதற்குச் செத்துவிடலாம்’ என்று பல முறை இவரது அம்மா கூறியிருக்கிறார். அப்பா தினமும் இரவு காலுக்குப் பயிற்சி அளிப்பார். அந்த அறையை 10 முறை சுற்றி வரச் சொல்வார்.

ஆனால் அது கடுமையான பயிற்சியாக இருந்தது. முடியவில்லை என்று சொன்னால் பொறுமையிழந்து, வெஸ்லியின் தலையைச் சுவரில் அடிப்பார். இல்லையென்றால் வாளி நீரில் தலையை அமிழ்த்துவார். ஒவ்வொரு நாளும் கொடூரமாகக் கழிந்தது. குழந்தைப் பருவத்தில் ஓரளவு மகிழ்ச்சியை அளித்தது அவருடைய பாட்டிதான். அவர்தான் ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கான பள்ளியில் வெஸ்லியைச் சேர்த்துவிட்டார். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. நடக்க வைப்பதற்காக, ஓர் அறுவை சிகிச்சையைப் பெற்றோர் செய்தனர். அதுவரை சில அடிகள் நடக்க முடிந்த வெஸ்லியால், அதற்குப் பிறகு ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாமல் போய்விட்டது. நிலைமை மோசமான பிறகு பெற்றோர் இருவரும் வார்த்தைகளாலும் கைகளாலும் வன்முறையில் இறங்கினர்.

ஒரு கட்டத்தில் மிகுந்த மன அழுத்தத்துக்குச் சென்றவர், 4 தடவை தற்கொலை செய்துகொள்ள முயன்றார். “ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு சக்தி என்னைத் தற்கொலை செய்துகொள்ளாமல் தடுத்துவிட்டது. என் தேவைக்கு நானே சம்பாதிக்க முடிவு செய்து, டிஸ்யூ தாள்களை விற்க ஆரம்பித்தேன். சிலர் எனக்காக வாங்குவார்கள். சிலர் பணத்தைப் போட்டுவிட்டுச் செல்வார்கள். இன்னும் சிலர் நான் பிச்சை எடுப்பதாகச் சொல்வார்கள். என்னால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைனில் ஒரு பெண் அறிமுகமானார். விரைவிலேயே நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம். நான் பிலிப்பைன்ஸ் சென்று அவரைச் சந்தித்து, சிங்கப்பூருக்கு அழைத்து வந்துவிட்டேன்.

5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டோம். ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்திருக்கிறோம். வாழ்க்கையில் மகிழ்ச்சியான பக்கங்களையும் என் மனைவி மூலம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய அனுபவங்களைப் புத்தகமாக எழுதினால், என்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது உத்வேகம் அளிக்கலாம், தன்னம்பிக்கையூட்டலாம். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளைப் புரிந்துகொள்ளலாம். வலது கால் பெருவிரலால் ஒவ்வொரு எழுத்தாக அடித்து, 5 வருடங்களில் ஒரு புத்தகத்தை எழுதி விட்டேன். ஆகஸ்ட் 23 அன்று அதிகாரப்பூர்வமாக சிங்கப்பூர் கூகுள் தலைமையகத்தில் புத்தகம் வெளியிடப்படுகிறது” என்கிறார் வெஸ்லி. ‘Finding Happiness Against the Odds’ என்ற இவரது புத்தகம் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து, ஒரு ஷு கடை ஆரம்பிக்க விரும்புகிறார்.

வெஸ்லி தி கிரேட்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x