

பாகிஸ்தான் நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் விலகினார். அவரது இடத்தில் தற்போது ஷாகித் ககான் அப்பாஸி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வாக்கெடுப்பில் 341 உறுப்பினர்களில் இவர் 221 வாக்குகளைச் சேகரித்து வெற்றி பெற்றார். பிரிந்திருந்த எதிர்க்கட்சியினர் 3 வேட்பாளர்களைக் களமிறக்கினர், அவர்கள் அனைவரும் சேர்ந்து 84 வாக்குகளையே பெற்றனர்.
அந்நாட்டு அரசியல் சாசன முறைப்படி ரகசிய வாக்கெடுப்பு முறை நடந்தது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நவீத் குவாமர் 47 வாக்குகளையும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ- இன்சாஃப் கட்சியின் வேட்பாளர் 33 வாக்குகளையும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் வேட்பாளர் 4 வாக்குகளையும் பெற்றனர்.
முன்னதாக நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷாபாஸ் ஷெரீப்பை பிரதமராக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இவர் பஞ்சாப் மாகாண முதல்வராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நவாசின் தம்பி ஷாபாஸ் ஷெரீப் தற்போது பாராளுமன்ர உறுப்பினராக இல்லையென்பதால் அவர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆக வேண்டும். அதுவரை இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோலிய அமைச்சராக இருந்த போது இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான ஒப்பந்தத்தில் ரூ.20,000 கோடி அளவுக்கு முறைகேட்டில் இவர் ஈடுபட்டிருப்பதாக பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமைக் குழு 2015-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்துள்ளது.
ஆனால் அந்த வழக்கு விசாரணை மட்டத்திலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் ஷாகித் ககான் அப்பாஸி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.