

இந்தியப் பெருங்கடலிலுள்ள கடல் வழிகளை மொரீஷியஸ் கடலோரக் காவல்படையுடன் இணைந்து பாதுகாப்பதில், இந்தியக் கடற்படை உறுதி பூண்டுள்ளது என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மூன்று நாள் சுற்றுப்பயணமாக மொரீஷியஸ் சென்றுள்ளார். அங்கு, இந்தியத் தொழிலாளர்கள் மொரீஷியஸுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாகச் சென்ற 180-வது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், பங்கேற்ற சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:
தீவு நாடான மொரீஷியஸ், நீண்ட கடல் எல்லைகளைக் கொண்டுள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு கடல்சார் பாதுகாப்பு என்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடல் வழித்தட பாதுகாப்பு என்பது நமது எல்லை, பொருளாதாரம், எரிசக்தி சார்ந்த தவிர்க்கவியலாத பாதுகாப்புத் தேவையாகும்.இந்தியப் பெருங்கடல் பாதைகளை, மொரீஷியஸ் கடலோரக் காவல்படையுடன் இணைந்து பாதுகாப்பதில், இந்திய கடற்படை உறுதிபூண்டுள்ளது. இது இருநாடுகளின் பொதுவான நலனாகும்.
மொரீஷியஸ் கடல் எல்லைக்குள் இந்திய போர்க்கப்பல்கள் ஐஎன்எஸ் மும்பை, ஐஎன்எஸ் தீபக், ஐஎன்எஸ் தல்வார் ஆகியவை உலவ விடப்பட்டுள்ளன. இரு நாடுகளின் பல்முனை கூட்டுறவின் அடிப்படையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை, கடல்பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நமது நாடுகளுக்கு இடையே ராணுவம் உட்பட பல்வேறு துறைகளில் உள்ள நட்பும் உறவும் மென்மேலும் வளரும் என நம்பிக்கையுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மொரீஷியஸின் பெரும் வர்த்தகக் கூட்டாளியாக இந்தியா விளங்குகிறது. கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து மொரீஷியஸுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாவாகும். மொரீஷியஸுக்கு 2012-2013-ம் நிதியாண்டில் 131 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை (சுமார் ரூ. 8040 கோடி) ஏற்றுமதி செய்த இந்தியா, அங்கிருந்து சுமார் ரூ. 174 கோடிக்கு இறக்குமதி செய்துள்ளது. மொரீஷியஸில் 10,000 இந்தியர்கள் வசிக்கின்றனர். இதில், 6865 பேர் பணி அனுமதி பெற்றுள்ளனர். 696 பேர், தொழில்முறைப் பணியில் உள்ளனர்.