

மின்சாரத் துறையில் ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் சார்க் அமைப்பில் உள்ள நாடுகள் நேற்று கையெழுத்திட்டன.
சார்க் அமைப்பில் உள்ள 8 நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த மின் பகிர்வை மேற்கொள்ளவும், அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. சார்க் மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று 8 நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் மின் துறை ஒப்பந்தத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கையெழுத்திட்டனர்.
ஆனால், பெரிதும் எதிர்பார்க் கப்பட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்து மற்றும் ரயில் பாதை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை. பாகிஸ்தான் ஆட்சேபம் தெரிவித்ததே இதற்கு காரணம்.
இந்த ஒப்பந்தம் நிறைவேற் றப்பட்டிருந்தால், எளிதாகவும் குறைந்த செலவிலும் சார்க் நாடுகளிடையே மக்கள் பயணம் செய்வதற்கும், சரக்குகளை அனுப்புவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு மற்ற நாடுகளின் பிரதிநிதிகள், பாகிஸ்தான் தரப்பை வலியுறுத்தினர். ஆனால், அதை ஏற்காத பாகிஸ்தான் தரப்பு, இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த தங்கள் நாட்டில் அனுமதி பெறுவதற்கான நடைமுறைகள் நிறைவடையாததை சுட்டிக் காட்டினர்.
இந்நிலையில், சார்க் அமைப்பின் தற்போதைய தலைவரான நேபாளப் பிரதமர் சுசீல் கொய்ராலா தனது உரையில், “மோட்டார் வாகனம் மற்றும் ரயில் பாதை தொடர்பான ஒப்பந்தங்கள் தொடர்பாக உள்நாட்டில் அனுமதி பெறுவதற்கான நடைமுறைகளை நிறைவு செய்ய 3 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சார்க் அமைப்பின் அடுத்த கூட்டம் 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெறும்” என்று தெரிவித்தார்.
மரக்கன்று நட்டார் மோடி
நேபாளத்தின் மலைவாசஸ் தலமான துலிக்கெல்லுக்கு இந்தியா, இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பூடான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மற்ற நாடுகளின் தலைவர் களுடன் இந்திய பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் கைகுலுக்கி மோடி நலம் விசாரித்தார்.
பின்னர், அப்பகுதியில் ஆலமரக்கன்றை மோடி நட்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, நேபாளப் பிரதமர் சுசீல் கொய்ராலா ஆகியோரை பிரதமர் மோடி தனித் தனியே சந்தித்துப் பேசினார்.