

பாகிஸ்தான் வாகா எல்லைப் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் அருகே வாகா எல்லை அமைந்துள்ளது. இங்குள்ள இந்திய- பாகிஸ்தான் எல்லைச் சாவடியில் தினந்தோறும் மாலையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனை பார்ப்பதற்கு இருநாட்டு எல்லையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் கூடுகின்றனர்.
நேற்று மாலை வழக்கம்போல் இருநாட்டு வீரர்களும் கொடி யிறக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். சிறிது நேரத்தில் பாகிஸ்தான் எல்லை வாகா பகுதியின் வாகனம் நிறுத்தும் இடத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இதில் 52 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 70-க்கும் மேற் பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டனர்.
இதுகுறித்து லாகூர் போலீஸ் மூத்த அதிகாரி அமின் கூறியதாவது: வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு ஏராளமானோர் திரும்பி வந்து கொண்டிருந்தபோது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் கூறியபோது, வாகா எல்லையில் இருந்து 600 மீட்டர் தொலைவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் அதற்கு சிறிது தொலைவுக்கு முன்பாக தற்கொலைப் படை தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். சுமார் 5 கிலோ அளவுக்கு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தன.