

அமெரிக்கா தனது ராணுவ அதிகாரச் சட்டத்தில் 3 திருத்தங்களைக் கொண்டு வந்ததால் பாகிஸ்தான் நிதியுதவி பெறுவதில் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் திருப்திகரமான அளவில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவு அளிப்பது பற்றி முதன்மை அமெரிக்க அதிகாரிகள் நிறைய முறை எச்சரித்தும், கவலையையும் வெளியிட்டதன் பின்னணியில் இதனுடன் தொடர்புடைய பல நிபந்தனைகளை அமெரிக்க பிரதிநிதிகள் சபை.
அதாவது பாகிஸ்தானுக்கு ஏதாவது ராணுவ நிதி உதவி அளிக்கப்படுவதற்கு முன்பாக பாதுகாப்புச் செயலர் அதற்கு ஒப்புதல் அளிப்பது அவசியம் என்பது இந்தச் சட்டத்திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 2017 முதல் டிசம்பர் 31, 2018 வரையிலான காலக்கட்டத்தில் பாகிஸ்தானுக்கு 400 மில்லியன் டாலர்கள் வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டாலும், வடக்கு வாஜிரிஸ்தானில் ஹக்கானி வலைப்பின்னலுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சான்றிதழ் வழங்கி ஒப்புதல் அளித்தால்தா இந்த 400 மில்லியன் டாலர்கள் தொகைக்கு பாகிஸ்தான் தகுதியுடையதாகும் என்று இந்த திருத்தங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிப்பது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் உறுதியான நிரூபிக்கத்தக்க நடவடிக்கைகள் எடுப்பதையும் நிபந்தனையாக சேர்த்துள்ளனர்.
இந்த நிபந்தனைகள் குறித்து அமெரிக்க அயலுறவு விவகார கமிட்டியின் உறுப்பினர் டெட் போ கூறும்போது, “அமெரிக்காவை தொடர்ந்து பாகிஸ்தான் ஏமாற்றி வருவதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நிதியுதவி பெறுவதற்கு இனி இரட்டைச் சான்றிதழ் தேவை. அமெரிக்கா பயங்கரவாதி என்று அறிவித்த அல்லது அமெரிக்கா பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்த எந்த ஒரு அமைப்புக்கும் பாகிஸ்தான் உதவி செய்வது தெரியவந்தால் பாகிஸ்தானுக்கு உதவி நிறுத்தப்படும்.
ஆப்கானிஸ்தானை நிலையான ஒரு நிலைக்குக் கொண்டு வர பாடுபடும் அமெரிக்கர்களுக்கு எதிராகச் செயல்படும் பெனடிக்ட் ஆர்னால்டின் கூட்டாளியாக பாகிஸ்தான் இருந்து வருவது என்பது நன்கு அறியப்பட்டதே. இப்போதைக்கு இந்த நிதியுதவிக்கான நிபந்தனைகளில் ஹக்கானி வலைப்பின்னல் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
மேலும் பாகிஸ்தானுக்கு இந்த வகையில் செய்யும் உதவிகள் எந்த வகையிலும் அந்நாட்டினால் சிறுபான்மையினருக்கு எதிராகவோ, மத, அரசியல் சுதந்திரம் நாடுவோருக்கு எதிராகவோ பயன்படுத்தப்படவில்லை என்பதை காங்கிரஸுக்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் அப்பாவி அமெரிக்கர்களோ பிறரோ உயிர்பலியாவதைத் தடுக்கும் விதமாக பின் லேடன் இருப்பிடத்தைக் காண்பித்து உதவிய டாக்டர் ஷகில் அஃப்ரிடிக்கு அமெரிக்க மக்களும் உலகமும் நன்றிக் கடன் பட்டுள்ளது. இவரை சிறையில் அடைத்திருப்பது பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவுகளுக்கு தொடர்ந்து தடையாக இருந்து வருகிறது” என்று அறிக்கையில் உள்ளதைக் கூறினார்.