

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் பங்கேற்பதை முன்னிட்டு, ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்பகுதியில் 4 போர்க் கப்பல்களை ரஷ்யா அனுப்பியுள்ளது. இது ஆஸ்திரேலிய பிரதமருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் கடந்த ஜூலை மாதம் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 38 ஆஸ்திரேலியர்கள் உட்பட 298 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ரஷ்யா ஆஸ்திரேலியா இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதினை ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் ஜி-20 மாநாடு மூலம் டோனி அபோட் செல்வாக்கு பெறுவதை தடுக்கும் முயற்சியாக, மாநாட்டின் கவனத்தை திசை திருப்பும் வகையில் ரஷ்யா இந்தக் கப்பல்களை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
“ரஷ்ய கடற்படையில் பசிபிக் பிரிவு சோதனைப் பயணமாக ஆஸ்திரேலியா வந்துள்ளது. புதினின் பாதுகாப்புக்கு அல்ல” என்று ரஷ்ய தூதரகம் கூறியது.
இதனை டோனி அபோட் ஏற்கவில்லை. ஆஸ்திரேலிய போர்க் கப்பல்களை அனுப்பி ரஷ்ய கப்பல்களை கண்காணிக்க உத்தரவிட்டார்.