Published : 19 Jul 2017 10:00 AM
Last Updated : 19 Jul 2017 10:00 AM

சிக்கிம் எல்லைப் பிரச்சினை: போர் தொடுக்க தயங்க மாட்டோம் - சீன அரசு ஊடகம் மீண்டும் மிரட்டல்

சிக்கிம் எல்லைப் பிரச்சினையில் போர் தொடுக்க தயங்கமாட்டோம் என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

சீன அரசின் கருத்துகளை வெளியிடும் அந்த நாட்டு அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ தனது தலையங்க பக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைப் பிரசுரித்து வருகிறது. அந்த வரிசையில் நேற்று வெளியான தலையங்க பக்க கட்டுரையில் கூறியிருப்பதாவது:

சீனாவும் இந்தியாவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதில் சீனா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து உலக பொருளாதார வல்லரசுகளில் 2-வது இடத்தை எட்டிப் பிடித்துள்ளது. சீனாவின் வளர்ச்சி இந்தியாவை கவலையடைய செய்துள்ளது.

தற்போது சிக்கிம் எல்லையை ஒட்டிய சீன எல்லைக்குள் இந்திய வீரர்கள் அத்துமீறி ஊடுருவியுள்ளனர். இதனால் சீனாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இந்திய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும்.

அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழலை இந்தியா சீர்குலைத்து வருகிறது. அந்த நாட்டுடன் போரிட வேண்டும் என்று சீனா விரும்பவில்லை. அதேநேரம் எங்களது இறையாண்மையைக் காப்பாற்ற போர் தொடுக்க தயங்கமாட்டோம். எல்லையில் நீண்டகால மோதலுக்கும் தயாராகவே உள்ளோம்.

இந்திய, சீன எல்லை 3,500 கி.மீ. தொலைவு கொண்டது. 1962 போருக்குப் பிறகு இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இதன் பின்விளைவுகளை அந்த நாடு சந்திக்க நேரிடும்.

எல்லையில் இந்திய ராணுவம், வீரர்களைக் குவித்தால் கவலை யில்லை. எல்லையில் இந்தியா வுடன் போட்டியிட சீன ராணுவமும் தயாராகவே உள்ளது. இந்தியா, நேபாளம், பூடான் எல்லையை ஒட்டிய திபெத் பகுதிகளில் சாலை, ரயில் பாதைகள் அமைக்கப்படும். இதன்மூலம் சீன ராணுவத்தின் வலிமை அதிகரிக்கும். அதேநேரம் திபெத்தின் எல்லையோர கிராமங்களின் பொருளாதாரம், உள்கட்டமைப்புகள் மேம்படும்.

இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வியூகம்

அருணாச்சல பிரதேசத்தை மிக நீண்ட காலமாக சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தற்போது சிக்கிம் மாநில எல்லையான டோகாலா, பூடானின் டோகாலம் பகுதிகளை ராணுவ பலத்தால் ஆக்கிரமிக்க சீனா முயற்சி செய்கிறது.

சீன படைகள் முன்னேறுவதை தடுக்க சிக்கிம் எல்லையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள இந்திய நிலைகளில் ராணுவ உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம் ராஜ்ஜியரீதியிலும் சீனாவுக்கு இந்தியா நெருக்குதல் அளித்து வருகிறது. அண்மையில் அமெரிக்கா, ஜப்பான், இந்திய கடற்படைகள் இணைந்து பிரம்மாண்ட போர் ஒத்திகையை நடத்தின. மேலும் தென்சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுடன் நேருக்கு நேர் மோதும் ஆசியான் நாடுகளுடனும் இந்தியா தனது உறவை வலுப்படுத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x