

ஆட்சி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
சிங்கப்பூரின் தேசத் தந்தை என்றழைக்கப்படும் லீ குவான் யூ கடந்த 2015 மார்ச் மாதம் காலமானார். அவர் வசித்த வீடு சிங்கப்பூரின் ஆக்ஸ்லி சாலையில் உள்ளது. அந்த வீட்டை இடிக்க வேண்டும் என்று அவர் தனது உயிலில் குறிப்பிட்டுள்ளார். மறைந்த பிரதமர் லீ குவான் யூவுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் லீ சியன் லூங் சிங்கப்பூர் பிரதமராக உள்ளார்.
இந்நிலையில் தந்தையின் வீட்டை இடிக்கும் விவகாரத்தில் பிரதமர் லீ சியன் லூங்கிற்கும் அவரது சகோதரி லீ வெய் லிங், சகோதரர் லீ சியன் யாங் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
“ஆக்ஸ்லி சாலை வீட்டை இடிக்கவிடாமல் லீ சியன் லூங் தடுக்கிறார். தனது மகனை அரசியல் வாரிசாக்க முயற்சிக்கிறார்” என்று பிரதமரின் சகோதரியும் சகோதரனும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பிரதமர் லீ சியன் லூங் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நேற்று விளக்க மளித்தார். அப்போது அவர் கூறிய தாவது: எனது தந்தை லீ குவான் யூவின் வீடு ஆக்ஸ்லி சாலை இல்லம் அல்ல. அவர் கட்டிய வீடு சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் வீடாக இருந்தாலும் அவரது விருப்பம் சட்டத்துக்கு உட்பட்டதே. அந்த வீட்டின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க அமைச்சரவை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் நடவடிக்கைகளில் நான் தலை யிடுவது இல்லை. குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு. அவற்றை குடும்பத்துக்குள்ளேயே தீர்க்க முயற்சிக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஏன் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிலர் கேட்கின்றனர். சொந்த தம்பி, தங்கை மீது சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை.
இந்த சர்ச்சை விரைவில் முடிவுக்கு வரும். அப்போது எனது அரசு நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் செயல்படுகிறது என்பது மக்களுக்கு தெரியவரும்.
இவ்வாறு அவர் பேசினார்.