

போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சந்தேக லஷ்கர் அமைப்பு நபர் ஸுஃபயான் சஃபர் என்பவரை பாகிஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.
ஏற்கெனவே முதன்மை சந்தேக லஷ்கர் கமாண்டர் ஸைக்குர் ரெஹ்மான் லக்வியை ஏப்ரல் 2015-ல் பாகிஸ்தான் ஜாமீனில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
பெடரல் விசாரணை முகமை (FIA) கோர்ட்டில் சஃபருக்கு எதிராக ‘சாட்சியங்கள் இல்லை’ என்று கூறியதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
மும்பை 26/11 தாக்குதலுக்கு முன்பாக சஃபர் சக குற்றவாளி ஷாஹித் ஜமீல் ரியாஸுக்கு ரூ.3.98 மில்லியன்கள் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இன்னொரு சந்தேக நபரான இவரது சகோதரர் வங்கிக் கணக்கில் ரூ.14,800 டெபாசிட் செய்ததும் தெரிய வந்தது.
மும்பை தாக்குதல் வழக்கில் இவர் 2009-ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கடந்த ஆகஸ்டில் கைபர்-பத்தான்கவா பகுதியில் கைது செய்யப்பட்டார்.
லாகூரிலிருந்து 80கிமீ தொலைவில் உள்ள குஜ்ரவாலா மாவட்டத்தைச் சேர்ந்த சஃபர் உயர்மட்ட வழக்கான இதில் 21 பேர்களுடன் சந்தேகக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.
மற்ற 6 சந்தேகக் குற்றவாளிகளான அப்துல் வாஜித், மசார் இக்பால், ஹமத் அமின் சாதிக், ஷாஹித் ஜமீல் ரியாஸ், ஜமில் அகமது, யூனுஸ் அஞ்சும் ஆகியோர் ராவல்பிண்டி அடியாலா சிறையில் 2009- ஆண்டு முதல் அடைக்கப்பட்டுள்ளனர்.