

இந்து தேசியவாதத்தால் இந்தியா, சீனா இடையே போர் மூளும் அபாயம் உருவாகி உள்ளது என்று சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த நாளிதழில் நேற்று வெளியான தலையங்க பக்க கட்டுரையில் கூறியிருப்பதாவது:
சீனாவின் டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவம் ஊடுருவியுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பதற்றம் நிலவுகிறது. இந்து தேசியவாதத் தால் இந்தியாவில் சீன விரோத உணர்வு வளர்ந்து வருகிறது.
மிக நீண்ட காலமாக சீனாவை, இந்தியா எதிரியாகக் கருதுகிறது. இருப்பினும் சீனா நட்புக்கரம் நீட்டி வருகிறது. ‘ஒரே மண்டலம், ஒரே சாலை’ திட்டத்தில் இணைய இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது இந்தியாவுக்கு எதிரான திட்டம் என்று கூறி அதில் இணைய அந்த நாடு மறுத்துவிட்டது.
கடந்த 1962 போரில் இந்தியா தோல்வியை தழுவியது. அதன்பிறகு சீனா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இது இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை பழிவாங்க வேண்டும் என்று இந்து தேசியவாதிகள் வலியுறுத்துகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு இந்து தேசியவாத உணர்வு மேலோங்கி வருகிறது. இதன் காரணமாகவே தற்போதைய எல்லைப் பிரச்சினை உருவாகி உள்ளது.
சீனாவின் பலத்துடன் ஒப்பிடும் போது இந்தியா பலவீனமாக உள்ளது. இதனை அந்த நாட்டு அரசியல்வாதிகள் உணர வில்லை. இந்து தேசியவாதத்தால் இருநாடுகளிடையே இடையே போர் மூளும் அபாயம் உருவாகி உள்ளது.
இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.