

வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனை அமெரிக்கர்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திர தின பரிசு என்று வடகொரியா கூறியுள்ளது.
இதுகுறித்து வடகொரியாவின் அரசு ஊடகம், "வடகொரியா கண்டங்களுக்கிடையே நடத்திய ஏவுகணை சோதனை அமெரிக்கர்களின் சுதந்திர தினத்துக்கு அளிக்கப்பட்ட பரிசு.
மேலும் இந்தப் பரிசு அவர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளித்திருக்காது. அமெரிக்கா அலுப்பாக (boredom) உள்ளபோது அவர்கள் அதிலிருந்து வெளிவர அவர்களுக்கு பரிசளித்து உதவுகிறோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார்" என்று செய்தி வெளியிட்டுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் படைத்த அதிநவீன ஏவுகணை சோதனை வடகொரியா செவ்வாய்க்கிழமை நடத்தியது.
"வடகொரியாவின் இந்த ஏவுகணை 2,802 கி.மீ உயரத்தில் பறந்தபடி, 933 கி.மீ தூரம் வரை சென்றுள்ளது. வடகொரியா வலிமையான அணு ஆயுத நாடாகிவிட்டது. உலகின் எந்தவொரு நாட்டையும் தாக்கும் திறன் படைத்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வடகொரியாவிடம் இருக்கின்றன" என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா மீண்டும் நடத்தியிருப்பது, அமெரிக்காவை எரிச்சலடைய வைத்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா, தென் கொரியா நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய சோதனைகளை நிறுத்திக் கொள்ளும்படி ஐக்கிய நாடுகள் சபை மூலம் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.