

கத்தாருக்கு விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்று கொள்வதற்கான கால அவகாசத்தை 48 மணி நேரத்துக்கு அரபு நாடுகள் நீடித்துள்ளன.
தீவிரவாதத்துக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றஞ்சாட்டி அந்த நாட்டுடனான தூதரக உறவை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் அண்மையில் துண்டித்தன.
கத்தாரில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படைத் தளம் உள்ளது. எனவே சவுதி அரேபியாவுக்கும் கத்தாருக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்த அமெரிக்கா தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருதரப்பு மூத்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் முகாமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் இதில் இதுவரை எந்த சுமுக முடிவும் எட்டப்படவில்லை.
ஏற்கெனவே கத்தாருடனான சாலை, கடல், வான் வழிப் போக்குவரத்தை சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் முற்றிலுமாக தடை செய்துள்ளன. சில பொருளாதார தடைகளையும் அந்நாட்டின் மீது அரபு நாடுகள் விதித்துள்ளன.
இந்த நிலையில், கத்தாருக்கு 13 நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் அவற்றை ஒருவாரத்துக்குள் அந்த நாடு நிறைவேற்றத் தவறினால் புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அரபு நாடுகள் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்தன.
இதற்கிடையில் நிபந்தனைகளை கத்தார் ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்ற குவைத்தின் வேண்டுகோளை அரபு நாடுகள் ஏற்று கொண்டுள்ளன.
அதன்படி, கத்தார் நாடு தனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள கால அவகாசத்தை 48 மணி நேரத்துக்கு நீட்டித்து அரபு நாடுகள் உத்தரவிட்டுள்ளன.
அரபு நாடுகள் கத்தாருக்கு விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து கத்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் காலித் பின் முகமத் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "பிற நாடுகள் விழுங்குவதற்கு கத்தார் எளிமையான நாடு அல்ல. நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் நாட்டை பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.