Last Updated : 11 Nov, 2014 09:26 AM

 

Published : 11 Nov 2014 09:26 AM
Last Updated : 11 Nov 2014 09:26 AM

ஹா – ஹாங்காங்

பொருளாதாரத்தில் அப்படி யோர் அப்பப்பா வளர்ச்சி! எனவே அந்த நான்கு பகுதிகளையும் ‘ஆசியப் புலிகள்’ என்று கூறுகிறார்கள். ஆண்டுக்கு ஏழு சதவீதத்துக்கும் அதிகம் என்கிற அளவில் பொருளாதார வளர்ச்சி. வெகு வேகமான தொழில் முன்னேற்றம். சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் ஆகியவற்றுடன் கைகோத்து கர்வம் பொங்க இப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பகுதி ஹாங்காங்.

ஹாங்காங் என்றால் சீன மொழியில் ‘‘நறுமணம் வீசும் துறைமுகம்’’ என்று பொருள். ஆனால் இன்று அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் ‘’எங்கள் மூச்சுக் காற்றே தடை பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் நறுமணத்தை எங்கே சுவாசிப்பது?’’ என்கிறார்கள் விரக்தியோடு. அவர்களைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பதுதான் இப்போதைக்கு அவர்களுக்கான சுவாசம்.

சீனாவும் அதன் ஒரு பகுதியான ஹாங்காங்கும் கோபம் கொண்ட கணவன் மனைவி போல முறைத்துக் கொண்டும் விரைத்துக் கொண்டும் இருக்கின்றன. விவாகரத்து நடந்து விடுமோ? அவ்வளவு சுலபத்தில் ஆகிவிடாது என்றாலும் அதற்கான தொடக்கம் தொடங்கிவிட்டது என்பவர்களும் உண்டு. மொத்த பரப்பளவே சுமார் 1060 சதுர கிலோ மீட்டர்கள்தான். என்றாலும் ஹாங்காங்கில் வசிப்பவர்கள் 70 லட்சத்துக்கும் அதிகம்.

பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள் ஹாங்காங்கில் உள்ளன. மின்னணுக் கருவிகள், உடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் என்று இங்கு தயாரிக்கப்படும் அத்தனை பொருள்களுமே ஏற்றுமதிக்குதான். அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் என்று பல முக்கிய வாடிக்கையாளர்கள் ஹாங்காங்குக்கு உண்டு. சீனாவுடன் ஒட்டிக் கொண்டுள்ள இந்த தீபகற்பத்தில் 230க்கும் மேற்பட்ட சிறிய தீவுகள் உண்டு. ஹாங்காங் இவ்வளவு பிரபலமடைய ஒரு முக்கிய காரணம் அது ஆசியாவின் மிக முக்கியமான துறைமுகங்களில் ஒன்று.

அது ஓர் இலவசத் துறைமுகம். அதாவது பிற பகுதிகளிலிருந்து இங்கு வந்து சேரும் பொருள்களுக்கு இறக்குமதி வரி கிடையாது. இதனால் குறைந்த விலையில் ஹாங்காங்கில் பொருட்களை வாங்குவது சாத்தியமாகிறது.

சீனாவில் பிற பகுதிகள் (தைவான் நீங்கலாக) அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்க சம்மதம் என்பதுபோல் மெளனம் சாதிக்க, ஹாங்காங்கில் மட்டும் ஏன் சுதந்திரக் காற்று வீசுகிறது? அவர்களுக்கு மட்டும் (மேலும்) விடுதலை வேட்கை ஏன்?

ஒரு நாடு என்றால் அது முழுவதுக்கும் ஒரே வகை நாணயம்தானே? ஆனால் சீனாவின் நாணயம் யுவான். ஹாங்காங்கின் நாணயம் ஹாங்காங் டாலர். ஏன் ஒரே நாட்டின் இரு பகுதிகளில் இந்த வேறுபாடு? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்க வேண்டுமென்றால் நம் முன்னால் கொசுவர்த்தி சுழல வேண்டும். அதாவது ஃப்ளாஷ் பாக். நூறு வருடங்களையும் தாண்டி பின்னோக்கிச் செல்வோம்.

நிலத்தை குத்தகைக்கு விடுவார் கள். வீட்டையும் குத்தகைக்கு விடுவதுண்டு. நாட்டின் ஒரு பகுதியை குத்தகைக்கு விடுவார் களா? அந்த அதிசயம் நடந்தது ஹாங்காங்கில்தான். ஒரு போதைப் பொருள் இந்த அதிசயத்தை நிகழ்த்தியது.

ஐரோப்பியர்கள் - முக்கியமாக பிரிட்டிஷ்காரர்கள் – தங்கள் நாட்டில் விளைந்த ஓபியத்தை சீனாவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். பதிலுக்கு சீனத்துப் பட்டுகளை அள்ளிச் சென்றார்கள். சீன வைத்திய முறையில் அபினியைப் (அபினிதான் ஓபியம்) பயன்படுத்தினார்கள்தான். என்றா லும் சீனர்கள் அபினியை ஒரு போதைப் பழக்கமாக்கிக் கொள்ளவில்லை. இருமல் மருந்துகளில் ஆல்கஹால் இருந்தாலும், இருமல் மருந்து குடிப்பவர்களில் பலரும் மதுப் பழக்கம் இல்லாதவர்கள் தானே? அப்படித்தான்.

ஆனால் சீனர்களுக்கு அப்படி யொரு பழக்கம் (இருமல் மருந்து அல்ல, ஓபியம்) இருந்தால் நல்லது என்று பிரிட்டிஷார் கருதினார்கள். அப்போதுதானே தங்கள் கைவசம் உள்ள பகுதிகளில் விளையும் அபினியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து பணம் பார்க்கலாம். (அப்போது ஆங்கிலேயர் வசம் இருந்த பகுதிகளான ஒடிஷா, வங்காளம், பிஹார் ஆகிய பகுதிகளிலும் அபினி உற்பத்தி செய்து அதன் வியாபார உரிமை களைத் தாங்களே எடுத்துக் கொண்டிருந்தது கிழக்கிந்திய கம்பெனி).

“புகைத்துப் பாருங்கள். சொர்க்கம் புலப்படும்” என்பது போல் சீனாவில் பலத்த பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் என்ன தான் இருக்கிறது பார்ப்போமே என்று அபினியை சுவைக்கத் தொடங்கிய சீனர்கள் அதற்கு அடிமையானார்கள். சீனா முழு வதுமே அபினிப் பழக்கம் ஒரு தொற்றுநோய் போல பரவத் தொடங்கியது. குறிப்பாக அந்நிய வியாபாரிகள் அனுமதிக்கப்பட்ட ஒரே சீனத் துறைமுக நகரமான காண்ட்டன் பகுதியில்.

சீனாவின் அப்போதைய சக்ர வர்த்தி டாவோ குவாங் பதறினார். மக்களின் உடல்நலம், நாட்டின் பொருளாதாரம் இரண்டுமே சீரழிகிறதே!

அபினி தடைச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தார் சக்ரவர்த்தி. அபினி இறக்குமதி நின்றது - அதாவது பகிரங்க இறக்குமதி மட்டும்! இதற்குப் பிறகு கள்ளத்தனமாக அபினியை சீனாவுக்கு கடத்தியது கிழக்கிந்திய கம்பெனி. தான் நேரடியாக இந்த வியாபாரத்தில் தலையிடாமல் தனிப்பட்ட வியாபாரிகளுக்கு லைசன்ஸ் அளித்து சாமர்த்தியமாக நடந்து கொண்டது.

கோபம் கொண்ட சக்ரவர்த்தி லின் என்ற அதிகாரியை விசேஷ அதிகாரங்களுடன் காண்ட்டன் நகருக்கு அனுப்பினார். அந்த அதிகாரி சுறுசுறுப்பானவர். உடனடியாக ஓர் உத்தரவை வெளியிட்டார். “இன்னும் மூன்று நாட்களுக்குள் சீனாவில் உள்ள எல்லா அன்னிய வியாபாரிகளும் தங்களிடம் உள்ள அபினியை ஒப்படைத்துவிட வேண்டும்”.

எந்த அந்நிய வியாபாரியும் இதற்கு மதிப்பு கொடுக்கவில்லை. ஆனால் லின் இதை அதோடு விடுவதாக இல்லை. அந்நிய வியாபாரிகள் வசித்த பகுதியைச் சுற்றி காவல்படைகளை நிறுத்தி வைத்தார். வியாபாரிகள் காவல் கைதிகள் போல் ஆகிவிட்டார்கள். வேறு வழியில்லாமல் அபினியை வேண்டா வெறுப்பாக ஒப்படைத் தனர். பிரிட்டிஷார் பறிகொடுத்த அபினியின் மதிப்பு அப்போதே சுமார் ஒரு கோடி ரூபாய்!

அந்த அபினியுடன் சுண்ணாம் பைக் கரைத்து சமுத்திரத்தில் கொட்டினார் லின். “இனி அபினி வியாபாரம் செய்தால் மரண தண்டனைதான்” என்றார். போதாக்குறைக்கு காண்ட்டன் துறைமுகத்தில் இனி வெளிநாட்டு வணிகம் கிடையாது என்றார். ஆனால் சீனா சிறிதும் எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டன. அதில் ஹாங்காங்கின் விதி மாற்றி எழுதப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x