இஸ்ரேல் பிரதமருக்கு மோடி அளித்த நினைவுப் பரிசு

இஸ்ரேல் பிரதமருக்கு மோடி அளித்த நினைவுப் பரிசு
Updated on
1 min read

3 நாட்கள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, விமான நிலையத்துக்கு நேரில் வந்து உற்சாக வரவேற்பு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி இந்தியா சார்பாக கேரளாவிலிருந்து கொண்டு வந்த இரு நினைவுப் பரிசுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வழங்கினார்.

இந்தியாவிலுள்ள நீண்ட யூத வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த பரிசு குறித்து பிரதமர் அலுவக ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "யூதர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் இரு காப்பர் தகடுகள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. இவை 9-ஆம் மற்றும் 10-ஆம் நூற்றாண்டை சார்ந்தவை.

இதில் முதல் காப்பர் தகடு யூதர்களின் தலைவரான ஜோசப் ராபனுக்கு, அப்போதைய ஆட்சியில் இருந்த இந்து அரசர் சேரமான் பெருமாளால் வழங்கப்பட்டது.

இரண்டாவது தகடு, இந்தியாவுடனான யூதர்களின் வர்த்தகம் குறித்து விளக்குகிறது.

இந்த தகடுகள் கேரளாவின் திருவல்லாவில் உள்ள மலங்கரா மார் தோம சிரியன் தேவாலயத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தத் தகடுகளுடன் கேரளாவிலுள்ள யூத சமூகத்தைச் சேர்ந்த பழமையான தோரா சுருளையும் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.

தென்னிந்தியாவின் கலையை பிரதிபலிக்கும் தங்கத்தால் பூசப்பட்ட உலோக கிரீடம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in