

இஸ்ரேல் நாட்டில் வளரும் மலர் ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த 80 ஆண்டுகளில் இஸ்ரேல் நாட்டுக்கு முதன்முதலாக இந்தியப் பிரதமர் ஒருவர் வருகை தந்ததையொட்டி இஸ்ரேலில் சமீப காலமாக பெருமளவில் வளரும் மலரினத்துக்கு மோடியின் பெயரை சூட்டியுள்ளனர்.
'இஸ்ரேலி கிரைசாந்தமம்' என்ற மலர் இனி மோடி என அழைக்கப்படும் என அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இத்தகவலை இஸ்ரேல் நாட்டின் ட்விட்டர் பக்கத்தில் #GrowingPartnership! என்ற ஹேஷ்டேகின் கீழ் அரசுத் தரப்பில் பகிர்ந்திருந்தனர்.
முன்னதாக பிரதமர் மோடி, டேன்சிங்கர் மலர் பண்ணைக்குச் சென்றார். அங்கு அவர் மலர் சாகுபடியில் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.
டான்சிங்கர் மலர் பண்ணைக்கு மோடி வருகை தந்ததை நினைவுகூரும் வகையிலேயே இஸ்ரேல் மலருக்கு மோடி பெயர் சூட்டப்பட்டதாக பிஐபி தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக நேற்று இஸ்ரேல் சென்றார். அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மூத்த அமைச்சர்கள் விமான நிலையத்துக்கு நேரில் வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தியா, இஸ்ரேல் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தூதரக உறவு நீடிக்கிறது. ஆனால் பாலஸ்தீன பிரச்சினை காரணமாக இந்திய பிரதமர்கள் யாரும் இஸ்ரேல் சென்றது இல்லை. முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்.