Published : 18 Jul 2017 10:41 AM
Last Updated : 18 Jul 2017 10:41 AM

உலக மசாலா: சைக்கிளை மீட்ட சாமர்த்திய பெண்

இங்கிலாந்தின் பிரிஸ்டோல் பகுதியில் வசிக்கும் 30 வயது ஜென்னி மார்ட்டனின் சைக்கிள் காணாமல் போனது. அது விலையுயர்ந்த ஜெர்மன் சைக்கிள். சங்கிலியால் பிணைத்து வைத்திருந்த சைக்கிளை வெட்டி, எடுத்துச் சென்றிருந்தனர். காணாமல் போன வருத்தத்தில் மிகவும் மனம் உடைந்து போனார் ஜென்னி. 24 மணி நேரம் கழித்து ஃபேஸ்புக்கில் இவரது சைக்கிள் விற்பனைக்கு வந்திருந்தது.

யாரோ தன்னுடைய சைக்கிளைத் திருடிச் சென்றதோடு, எவ்வளவு தைரியமாக விற்பனையும் செய்கிறார் என்று கொதித்துப் போனார். சைக்கிள் திருடர்களிடமிருந்து எப்படியாவது சைக்கிளை மீட்க வேண்டும் என்று முடிவு செய்தார். காவல் நிலையத்தில் தொலைந்த சைக்கிள் குறித்து புகார் அளித்தார். அவர்கள் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. தானே ஒரு திட்டம் போட்டு சைக்கிளை மீட்டு விடுவதாகவும் அதற்கு மட்டும் ஒத்துழைப்பு கொடுத்தால் போதும் என்றும் கேட்டுப் பார்த்தார். அதற்கும் காவல் துறையினரிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. தானே தனியாகக் களத்தில் இறங்கினார்.

சைக்கிள் விற்பனை என்று அறிவிப்பு வெளியிட்ட அலைபேசி எண்ணுக்கு, ஒரு நண்பர் மூலம் தொடர்புகொண்டார். ‘என் தங்கைக்கு இந்த சைக்கிள் மிகவும் பிடித்துவிட்டது. அதனால் இதை யாருக்கும் கொடுத்துவிட வேண்டாம். எவ்வளவு விலை வேண்டுமானாலும் தந்துவிடுகிறோம்’ என்று சொல்ல வைத்தார். சைக்கிள் திருடரும் இதை ஏற்றுக்கொண்டு, மறுநாள் எங்கே வரவேண்டும் என்பதைச் சொன்னார். மறுநாள் ஜென்னி மட்டும் அந்த இடத்துக்குச் சென்றார். சைக்கிள் குறித்த விவரங்களை எல்லாம் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டார். தனக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றும் ஒருமுறை ஓட்டிப் பார்க்கலாமா என்றும் கேட்டார். திருடரும் சம்மதித்தார். ஜென்னி சுற்றும் முற்றும் பார்த்தார்.

ஒருவேளை தான் சிக்கிக்கொண்டால் மிகப் பெரிய ஆபத்தில் மாட்டிவிடுவோம் என்பதைப் புரிந்துகொண்டார். சைக்கிளில் ஏறி அமர்ந்தார். வேகமாக பெடலை அழுத்தினார். சற்றுத் தொலைவு சென்றதும் திரும்பிப் பார்த்து, சைக்கிள் ஓகே என்றார். திருடர் திரும்பி வரச் சொன்னார். சைக்கிளை இன்னும் வேகமாக மிதித்து, வழிகளை மாற்றி, அந்த இடத்தைக் கடந்து, பத்திரமாக காவல் நிலையம் வந்து சேர்ந்தார். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம், அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று காவல் துறையினர் எச்சரித்து ஜென்னியை அனுப்பி வைத்தனர்.

திருடருக்குப் பாடம் புகட்டிய ஜென்னி!

ஜப்பானில் உள்ள மிகச் சிறிய தீவு ஓகினோஷிமா. இது புனிதத் தீவாகக் கருதப்படுகிறது. இங்கே பெண்களுக்கு இதுவரை அனுமதி கிடையாது. தீவிலுள்ள ஆலயத்துக்குச் செல்ல ஆண்டுக்கு 200 பக்தர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். அவர்கள் கடலில் குளித்து, ஆடையின்றி தீவுக்குள் செல்ல வேண்டும். தற்போது இந்தத் தீவை யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக அறிவித்திருக்கிறது. மனிதர்களின் வருகையால் தீவின் சூழல் பாதிக்கப்படுவதால், அடுத்த ஆண்டு முதல் தீவுக்குச் செல்வதைத் தடை செய்திருக்கிறது. ஒன்றிரண்டு துறவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே முன் அனுமதி பெற்று இந்தத் தீவுக்குள் செல்ல முடியும்.

இனி ஆண்களுக்கும் அனுமதி இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x