

டோக்ளாம் பகுதியில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்சினையை முறையாகக் கையாள வேண்டும் என்றும் சூழ்நிலைகள் கையை மீறிவிட்டால் போர் சாத்தியம் ஏற்படும் என்று சீன அரசு நாளிதழான குளோபல் டைம்சில் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதில் வெளியான செய்தி வருமாறு:
இந்தியா-சீனா தங்களுக்கிடையேயான மோதலை சரிவரக் கையாளவில்லையெனில் போர் சாத்தியமே எஞ்சும். சீனா தனது இறையாண்மையைத் தக்க வைக்க நடவடிக்கைகளில் இறங்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவிக்கும் போது, “சீனாவும் 1962 சீனா அல்ல, மாறிவிட்டது” என்று ஷாங்காய் முனிசிபல் சென்டர் சர்வதேச ஆய்வுத்துறை பேராசிரியர் வாங் தெஹுவா தெரிவித்துள்ளார்.
இவர் மேலும் கூறும்போது, 1962 முதலே சீனாவை இந்திய பெரிய போட்டி நாடாகக் கருதுகிறது. காரணம் இரு நாடுகளுக்கும் மக்கள் தொகை உள்ளிட்ட பொதுத்தன்மைகள் உள்ளன” என்றார் வாங்.
இந்தச் செய்தி அறிக்கையில் மேலும் கூறுப்பட்டுள்ளதாவது: 1962 போரில் சீனப் படையினர் 722 பேர் பலியாகினர், 4,383 இந்தியப் படையினர் பலியாயினர், என்று கூறியுள்ளது.
ஆசியா பசிபிக் ஆய்வுத்துறையைச் சார்ந்த மையத்தின் இயக்குநர் ஸாவோ கான்செங் கூறும்போது, “இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை பிற நாடுகள், குறிப்பாக அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள காத்திருக்கின்றன. இந்தியா சீனாவுடன் மோதல் போக்கைக் கைவிடுவது இரு நாடுகளுக்கும் நல்லது” என்றார்.