

சீனாவுக்கு எதிராகப் போராடும் ஹாங்காங் மக்கள் எல்லைக் கோட்டை தாண்டினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் கடந்த 1997 ஜூலை 1-ம் தேதி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சீனாவின் ஆட்சிக்கு எதிராக ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அங்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் போராட்டங் கள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் ஆட்சி, அதிகாரம் சீனாவுக்கு கைமாறிய 20-வது ஆண்டு தினம் ஹாங்காங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஹாங்காங்கின் புதிய தலைமை நிர்வாகியாக கேரி லாம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பங்கேற்றார். இந்த விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் முழுவதும் ஏராளமானோர் நேற்று போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதை சுட்டிக் காட்டி சீன அதிபர் ஜி ஜின்பிங் விழாவில் பேசினார். அவர் கூறியபோது, சீனாவின் இறை யாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சிவப்பு எல்லைக் கோட்டை தாண்டும் போராட்டக் காரர்கள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். சீனாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.