

சவுதி அரேபியாவில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியா, வங்கதேசத்தைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்கு தென்மேற்கு பகுதியில் உள்ள நாஜ்ரன் நகரில் இந்திய, வங்கதேச தொழிலாளர்கள் ஒரு வீட்டில் தங்கியிருந்தனர்.
அந்த வீட்டில் நேற்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் 11 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உயிரிழந்த அனைவரும் இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று சவுதி அரேபிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலியான இந்திய தொழிலாளர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.
தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டில் போதிய அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்தும், என்ன காரணத்தால் தீ விபத்து நேரிட்டது என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.