

வெனிசூலாவில் கடந்த 1999-ம் ஆண்டில் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது. சுமார் 14 ஆண்டுகள் அதிபராக நீடித்த அந்த கட்சியின் தலைவர் சாவேஸ் 2013-ம் ஆண்டில் காலமானார். இதைத் தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோ புதிய அதிபராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் அரசுக்கு எதிராக கடந்த ஏப்ரலில் வன்முறை, போராட்டங்கள் வெடித்தன. இதுவரை சுமார் 100 பேர் பலியாகி உள்ளனர்.
“அதிபர் மதுரோ சர்வாதிகாரியாக செயல்படுகிறார். அவரது தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே எதிர்க்கட்சிகள் தரப்பில் மக்களின் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சுமார் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதிபராக எதிராக வாக்களித்துள்ளனர். ஆனால் எதிர்க்கட்சிகளின் பொதுவாக்கெடுப்பை அரசு அங்கீகரிக்கவில்லை.