

சிக்கிம் டோக்ளாம் எல்லைப் பகுதியில் அரசியல் நோக்கங்களைச் சாதித்துக் கொள்ள அத்துமீறலையே ஒருகொள்கை உபரகணமாக வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சீன அயலுறவு அமைச்சகம் இந்தியாவை எச்சரித்துள்ளது.
சூழ்நிலைகளைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உடனடியாக இந்தியா தனது துருப்புகளைவாபஸ் பெறுவது நல்லது என்று சீனா மேலும் தெரிவித்துள்ளது.
“இந்திய எல்லை ராணுவ வீரர் அத்துமீறியதிலிருந்தே சீனாவில் உள்ள பல வெளிநாட்டுத் தூதர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது உண்மையா என்பதை உறுதி செய்யுமாறு கேட்டுள்ளனர்” என்று வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லூ காங் தெரிவித்துள்ளார்.
கடந்தவாரத்தில் இந்தியாவுடனான டோக்ளாம் எல்லைப் பிரச்சினை குறித்து சீனா தன் தூதர்கள், மற்றும் பிற அயல்நாட்டு தூதர்களை ரகசியமான கூட்டத்தில் சந்தித்து விவரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
“இம்முறை இந்திய ராணுவ வீரர் அத்துமீறி எல்லை தாண்டியுள்ளார். எனவே இந்தியா அத்துமீறுவதையே கொள்கை உபகரணமாக பயன்படுத்த வேண்டாம் என்று கூறுகிறோம்.
நாங்களும் இது குறித்து இந்தியத் தரப்பிடம் விளக்கியுள்ளோம்.
இந்தியாவும் இதில் தெளிவாக இருப்பது நல்லது. நடப்புச் சூழல் குறித்த தெளிவான புரிதல் தேவை. எனவே சட்டவிரோதமாக எங்கள் பகுதிக்குள் நுழைந்த ராணுவ வீரரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்றார் லூ காங்.
முன்னதாக சீன அரசு நாளிதழ் பல இடங்களில் இந்தியா முரண்பாடுகளை வளர்க்கும் விதமாகச் செயல்படுகிறது. சீனாவை முழுதும் எதிர்ப்பதாக இருந்தால் அதன் பலன்களை இந்தியா சந்திக்கும்.
இந்தியாவுடன் ராணுவ மோதலை தவிர்க்க சீனா கடுமையாகப் போராடுகிறது. ஆனாலும் இறையாண்மையைப் பாதுகாக்க போருக்குச் செல்லவும் சீனா தயங்காது என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.