Published : 18 Jul 2017 10:26 AM
Last Updated : 18 Jul 2017 10:26 AM

அருணாச்சல் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் போர் பயிற்சி

சிக்கிம் எல்லையைத் தொடர்ந்து அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டிய திபெத் பகுதியில் சீன ராணுவம் புதிதாக போர் பயிற்சி நடத்தியுள்ளது.

இந்தியாவின் சிக்கிம் மாநில எல்லையான டோகா லா, பூடானின் டோகாலம், சீனாவின் திபெத் ஆகியவை ஒரு முனையில் சந்திக்கின்றன. இந்தப் எல்லைப் பகுதியில் இந்திய, பூடான் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா முயற்சி செய்து வருகிறது.

குறிப்பாக பூடானின் பெரும் பகுதியை அந்த நாடு சொந்தம் கொண்டாடுகிறது. இதற்காக திபெத் எல்லையில் இருந்து பூடான் எல்லைக்கு எளிதில் செல்லும் வகையில் சாலை அமைத்து வருகிறது. இந்தியாவின் சிக்கிம் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து 2 பதுங்கு குழிகளையும் சீன ராணுவம் அழித்துள்ளது.

இதற்கு இந்தியாவும் பூடானும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிக்கிம் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தால் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சிக்கிமை ஒட்டிய திபெத் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

சிக்கிம் எல்லையைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியில் சீன ராணுவம் புதிதாக போர் பயிற்சி நடத்தியுள்ளது. சுமார் 11 மணி நேரம் நீடித்த இந்த போர்ப் பயிற்சியில், டாங்கிகளை அழிக்கும் குண்டுகள், பீரங்கிகளை அழிக்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பான வீடியோவையும் சீன ராணுவம் வெளியிட்டுள்ளது.

சீன ராணுவ வீரர்களைப் பொறுத்தவரை மலைப் பகுதியில் போர் புரிந்த அனுபவம் மிகவும் குறைவு. ஆனால் இந்திய வீரர்கள் மலைப் பகுதி போரில் மிகச் சிறந்தவர்கள். எனவே திபெத் மலைப் பகுதியில் சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் சீன ராணுவம் முதல்முறையாக போர் பயிற்சியை நடத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x