

இராக்கில் ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த மோசூல் நகரை அந்நாட்டு அரசுப்படைகள் கைப்பற்றியுள்ளன.
மோசூல் நகரில் கட்டுப்பாட்டை இழந்ததன் மூலம் இராக்கில் பெரும் சரிவை ஐஎஸ் சந்தித்துள்ளது.
மோசூல் நகரை கைப்பற்றிய அரசு படைக்கு இராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி நேரில் சென்று தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "பாதுகாப்புப் படை மற்றும் இராக் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வெற்றியை அறிவிப்பதற்கான சரியான தருணம் இது. இன்னும் சில பகுதிகள் மட்டுமே ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.
மோசூல் நகரில் இராக் படைகள் வெற்றி அடைந்ததை பொதுமக்கள் விதிகளில் இறங்கி கொண்டாடி வருகின்றனர்.
இராக்கின் 2-வது மிகப்பெரிய நகரமான மோசூலை கடந்த 2014-ம் ஆம் ஆண்டு ஜூனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க படையின் உதவியுடன் மோசூலில் ஈராக் தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாதிகளிடம் போரிட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மோசூல் நகரில், ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிராண்ட் அல் - நூரி மசூதியைக் (ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் -பாக்தாதி, முஸ்லிம் அரசின் தலைவராக (காலிஃபேட்) அறிவித்து கொண்டார்) கைப்பற்றியிருப்பதன் மூலம், ஐஎஸ் அமைப்புக்கு இராக் படைகள் கிட்டத்தட்ட முடிவுகட்டி விட்டன என்று செய்திகள் வெளியாகியது.
இந்த நிலையில் மோசூல் நகரை இராக் அரசு படைகள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
.