

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் நவாஸின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
பனாமா நாட்டின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் உதவியுடன் பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்திருப்பது ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு அம்பலமானது.
இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவரது குடும்பத் தினர் பெயர்கள் இடம்பெற்றிருந் தன. கடந்த 1990-களில் நவாஸ் பிரதமராக இருந்தபோது லண்டனில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியதாக ‘பனாமா பேப்பர்ஸ்’ ஆவணத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள், பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பான எப்ஐஏ கூடுதல் தலைமை இயக்குநர் வாஜித் ஜியா தலைமையில் 6 பேர் அடங்கிய சிறப்புக் குழுவை அமைத்தது.
இதைத் தொடர்ந்து பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள், மகள், சகோதரர் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் சிறப்புக் குழு தீவிர விசாரணை நடத்தியது. 60 நாட்கள் காலஅவகாசம் நிறைவடைந்த நிலையில் சிறப்பு குழு தனது விரிவான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஆய்வு செய்து உத்தரவுகளைப் பிறப்பிக்க உள்ளது. இதனால் நவாஸின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
“நவாஸ் ஷெரீப் மீதான சிறப்பு குழுவின் விசாரணை அறிக்கையை ஏற்கமாட்டோம்” என்று ஆளும் பிஎம்எல்-என் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.