

‘நடுவழியில கப்பல் ரிப்பேராயிட்டா அதைத் தள்ளுற வேலை' என்ற ஒரு தமிழ்த் திரைப்படத்தின் நகைச்சுவை காட்சி நம்மில் பலருக்கும் நினைவிருக்கும். ஆனால் உண்மையில் ஒரு விமானத்தை ஓட வைக்க பயணிகள் அதைத் தள்ளிக்கொண்டு போன சம்பவம் சைபீரியாவில் நடந்திருக்கிறது. | வீடியோ இணைப்பு கீழே |
சைபீரியாவில் இயங்கி வருகிறது யுதெய்ர் விமான சேவை நிறுவனம். இதற்குச் சொந்தமான கடேகவியா எனும் விமானம் 74 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை இகார்கா என்ற இடத்தில் இருந்து க்ரஸ்னோயார்ஸ்க் என்ற சைபீரிய நகரம் வரை பறந்து வந்தது.
தற்போது ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. அங்கு தட்பவெப்பம் மைனஸ் 52 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. அதனால் இகார்கா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் அடிப்பாகம் பனியால் உறைந்துவிட்டது.
இதன் காரணமாக ஓடுபாதையில் விமானம் நகர முடியவில்லை. எனவே, அதில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி விமானத்தைத் தள்ள முடிவு செய்தனர். அவர்கள் குறிப்பிட்ட தூரம் வரை விமானத்தைத் தள்ளிச் சென்றனர். பின்பு விமானம் இயங்கத் தொடங்கியது.
விமானத்தைப் பயணிகள் தள்ளிக்கொண்டு செல்லும் காட்சியை பயணி ஒருவர் வீடியோ எடுத்து அதை யூடியூப்பில் பதிவேற்றினார். அதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சைபீரியாவில் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே விமான நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் விளாதிமிர் அர்திமென்கோ கூறும்போது, "இந்த விமானம் 24 மணி நேரமாக விமான நிலையத்தில் நின்றிருந்தது. விமானத்தின் ‘பார்க்கிங் ப்ரேக்'கை விமானிகள் எடுக்க மறந்துவிட்டனர். இதனால் விமானத்தின் அடிப்பாகம் பனியால் உறைந்துவிட்டது" என்றார்.
விமானத்தை பயணிகள் தள்ளும் வீடியோ காட்சியைப் பார்த்த மக்கள் அந்தப் பயணிகளின் கூட்டு முயற்சியைக் கண்டு பாராட்டு தெரிவிக்கிறார்கள் என்றால், இன்னொரு பக்கம், ‘விமானத்தைத் தள்ளுவது எல்லாம் சைபீரியர்களுக்கு கேக் சாப்பிடுவது போல' என்று பத்திரிகைகள் புகழாரம் சூட்டுகின்றன.
கடந்த 2012ம் ஆண்டு இதே விமான நிறுவனத்தின் விமானம் ஒன்றில், இறக்கைகளில் படிந்திருந்த பனிக்கட்டிகளை அகற்றாமல்விட்டதால், அந்த விமானம் விபத்துக்கு உள்ளாகி 26 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.