இந்திய ராணுவம் ‘வரலாற்றுப் பாடங்களை’ புறக்கணித்து வருகிறது: சீனா மீண்டும் எச்சரிக்கை

இந்திய ராணுவம் ‘வரலாற்றுப் பாடங்களை’ புறக்கணித்து வருகிறது: சீனா மீண்டும் எச்சரிக்கை
Updated on
1 min read

சிக்கிமின் டோங்லாங் பகுதியில் தனது ராணுவத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும் இதுதான் ‘அர்த்தமுள்ள உரையாடலுக்கு’ முன் நிபந்தனையாக அமையும் என்று சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு முன் இல்லாத அளவுக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங் எச்சரிக்கை விடுத்த போது, இந்திய ராணுவம் சீனப் பகுதிக்குள் நுழைந்தப் படத்தைக் காண்பித்தார். மேலும் இந்தப் புகைப்படங்கள் அயலுறவு இணையதளத்திலும் வெளியிடப்படவுள்ளது என்றார்.

“இந்திய ராணுவம் விதிமுறைகளை மீறி டோங்லாங் எல்லையில் சீன எல்லைக்குள் ஊடுருவுகின்றனர்.. எனவே இந்திய ராணுவத்தை தங்கள் பகுதிக்குத் திரும்புமாறு இந்திய அரசு உடனடியாக உத்தரவிடுவது நல்லது. இதனை இத்தோடு முடிக்க இதுதான் நிபந்தனை, மேலும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு இதுவே முன் நிபந்தனையாகவும் அமையும்” என்றார்.

இதே நேரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீன ராணுவ அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் கலோனல் வூ கியான், தங்கள் எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்ததாக பூட்டான் கூறிய குற்றச்சாட்டை மறுத்தார்.

இந்திய ராணுவ அத்துமீறல் குற்றச்சாட்டை வலியுறுத்திய வூ கியான், “இயல்பான நடவடிக்கைகளை அவர்கள் இடையூறு செய்கின்றனர். சீனா தனது பிரதேச இறையாண்மையைக் காக்க தக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனை நாங்கள் இந்தியாவுக்குத் தெரியப்படுத்தி விட்டோம், உடனடியாக சீனப் பகுதியிலிருந்து இந்திய ராணுவத்தினர் தங்கள் பகுதிக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.

மேலும் இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் இந்தியா உள்நாட்டு வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயார் என்று கூறியதையும் போர் குறித்து சூசகமாகப் பேசியதையும் கண்டித்த வூ கியான், “மிகவும் பொறுப்பற்ற பேச்சு, போர் குறித்த எண்ணங்களை அவர் கைவிடுவது நல்லது. இந்தியாவின் இந்தக் குறிப்பிட்ட நபர் வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in