Published : 13 Jul 2017 10:56 AM
Last Updated : 13 Jul 2017 10:56 AM

உலக மசாலா: வங்கதேச ஓரினச்சேர்க்கையாளரின் திருமணம்

பிரிட்டனில் முஸ்லிம் ஆண், ஓர் ஆணைத் திருமணம் செய்திருக்கிறார்! 24 வயது ஜாஹெத் சவுத்ரி வங்கதேசத்தைச் சேர்ந்தவர். பிரிட்டனில் வசித்து வருகிறார். ஓரினச்சேர்க்கையாளராக இருந்ததால், முஸ்லிம் சமூகத்தால் வெறுக்கப்பட்டார். குடும்பத்தினர் அவர் மனதை மாற்றுவதற்காக, புனித யாத்திரைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் சவுத்ரியால் தன் மனநிலையை மாற்றிக்கொள்ள முடியவில்லை. ஒருகட்டத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொள்ள நினைத்தார். அப்போதுதான் அழுதுகொண்டிருந்த சியான் ரோகனைச் சந்தித்தார்.

சியானுக்குச் சின்ன வயதிலிருந்தே பெண்கள் அணியும் உடைகள், நகைகள் மீது அளவுக்கு அதிகமான ஆர்வம். அவர் வயது குழந்தைகள் தொலைக்காட்சியில் விளையாட்டுகளைப் பார்த்தால், இவர் ஃபேஷன் ஷோக்களைத்தான் பார்ப்பார். தன்னையும் ஒரு பெண்ணாக மாற்றிக்கொள்ள முயன்றபோது, எல்லோராலும் கிண்டலுக்கு உள்ளானார். அதனால் அவரும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் அழுதுகொண்டிருந்ததை, சவுத்ரி அறிந்துகொண்டார். ரோகனுக்கு ஆறுதல் கூறினார்.

விரைவில் இருவரும் நல்ல நண்பர்களானார்கள். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தனர். ரோகனின் பிறந்தநாள் அன்று சவுத்ரி, தன் திருமணக் கோரிக்கையை வைத்தார். அவரும் ஏற்றுக்கொண்டார். இருவரது வீட்டிலும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் முஸ்லிம் சமூகத்தில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. எதையும் கண்டுகொள்ளாமல் இருவரின் திருமணமும் இருவீட்டார், நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. “எங்கள் வாழ்க்கையில் அற்புதமான நாள் இது. என் அம்மாவின் ஆதரவு மட்டுமில்லாமல் இருந்திருந்தால் இந்தத் திருமணம் நடந்திருக்குமா என்று தெரியாது.

இறுதியில் இரு குடும்பங்களும் எங்களைப் புரிந்துகொண்டதில் மகிழ்ச்சி. ரோகன் வங்கதேச உடையை அணிந்துகொள்ள மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். எனக்காக மதம் மாறவும் இருக்கிறான். ஆனால் எங்களை யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. எங்கள் திருமண விஷயம் வெளியில் தெரிய ஆரம்பித்ததிலிருந்து கொலை மிரட்டல்களை நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் சந்தித்து வருகிறோம். எங்கள் இருவரின் தனிப்பட்ட விருப்பங்களை மதித்து, நிம்மதியாக வாழ விடுங்கள்” என்கிறார் சவுத்ரி.

இனியாவது மகிழ்ச்சியுடன் வாழட்டும் இந்தத் தம்பதி!



உலகின் முதல் பல் துலக்கும் கருவி அமாபிரஷ். இது 10 நொடிகளில் பற்களைத் துலக்கி, வெண்மையாக மாற்றிவிடுகிறது. “இந்தக் கருவிக்குள் சிறிய மோட்டார் வைக்கப்பட்டிருக்கிறது. அது ஏற்படுத்தும் அதிர்வுகளால், மென்மையான சீப்பு போன்ற பகுதியிலிருந்து பற்பசை வெளியேறி பற்களைச் சுத்தமாக்குகிறது. பாக்டீரியாக்களை எதிர்க்கும் சிலிக்கானால் இந்தக் கருவி செய்யப்பட்டிருப்பதால், 99.99% பாக்டீரியாக்கள் அழிந்துவிடுகின்றன.

கருவியை இயக்குவது எளிது, 2 ஆயிரம் தாடைகளை ஆராய்ந்து இதை உருவாக்கியிருக்கிறோம். அதனால் அளவு சரியில்லை என்ற பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு நாளைக்கு இரு வேளை பல் துலக்க வேண்டும். கருவியின் விலை 5,800 ரூபாய். 3 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை சிலிக்கானை மாற்ற வேண்டும். அதற்கு 450 ரூபாய் செலவாகும். பற்களும் வாயும் சுத்தமாக இருந்தாலே பாதி நோய் வராது என்கிறார்கள் அமாபிரஷ் நிறுவனத்தினர்.

10 நொடிகளில் பல் துலக்கும் கருவி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x