

போலந்தில் உள்ள பியலிஸ்டோக் பகுதியில் கட்டுமானப் பணி இடத்தில் 500 கிலோ இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியிலிருந்து 10,000 பேர் அவர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.
பெலாரஸ் எல்லையருகே உள்ள இந்த வடகிழக்கு நகரில் சுமார் 60 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஏனெனில் கட்டுமானப் பணியிடத்திலிருந்து கிரேன் மூலமாக இந்த வெடிகுண்டு அகற்றப்படும் போது வெடிக்கும் அபாயம் இருப்பதாக ராணுவ நிபுணர்கள் தெரிவித்ததையடுத்து இன்று அப்பகுதியிலிருந்து சுமார் 10,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
மேலும், இந்த வெடிகுண்டை ராணுவ முகாமுக்கு சிதைப்பதற்காகக் கொண்டு வரும் வழியில் உள்ள தெருக்களிலிருந்தும் மக்கள் அகற்றப்பட்டனர்.
போலந்தில் குறிப்பாக வார்சாவில் இத்தகைய இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் உலகப்போரின் போது வார்சா நகரம் 90% சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.