Published : 01 Jul 2017 11:09 AM
Last Updated : 01 Jul 2017 11:09 AM

உலக மசாலா: அட்டகாசமான காகித விமானம்!

காகிதத்தில் விமானம் செய்வதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 25 வயது லூகா லகோனி ஸ்டீவர்ட், 9 ஆண்டுகள் செலவு செய்து ஒரு காகித விமானத்தை உருவாக்கியிருக்கிறார்! ஆனால் இது சாதாரணமான காகித விமானம் இல்லை. ஏர் இந்தியா போயிங் 777 விமானத்தை அச்சு அசலாகக் காகிதத்தில் உருவாக்கியிருக்கிறார். “எனக்குச் சின்ன வயதிலிருந்தே விமானங்கள் மீது ஆர்வம் அதிகம். ஏர் இந்தியா 777 விமானத்தை இணையதளத்தில் பார்த்தேன். அந்த விமானத்தின் அளவுகள் எல்லாம் அத்தனை கச்சிதமாக இருந்தன. ஆனால் தொழில்நுட்ப ரீதியிலான வரைபடங்கள் எனக்குக் கிடைக்கவில்லை. விமானம் தொடர்பான நூற்றுக்கணக்கான புகைப்படங்களைச் சேகரித்துக்கொண்டேன். 2008-ம் ஆண்டு இந்த விமானத்தை உருவாக்க ஆரம்பித்தேன். போல்ட் முதல் இன்ஜின் வரை ஒவ்வொரு விஷயத்தையும் காகித விமானத்தில் கொண்டு வந்தேன். 2014-ம் ஆண்டு என்னுடைய காகித விமானம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அந்த ஆண்டுதான் பயணிகள் இருக்கைகளை உருவாக்கினேன். சாதாரண வகுப்புக்கு 20 நிமிடங்களும், நடுத்தர வகுப்புக்கு 4 முதல் 6 மணி நேரங்களும், உயர் வகுப்புக்கு 8 மணி நேரங்களும் இருக்கைகள் தயாரிக்க எடுத்துக்கொண்டேன். 9 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய காகித விமானம் முழுமையடைந்துவிட்டது. மீண்டும் இன்னொரு காகித விமானம் செய்யும் எண்ணம் இல்லை” என்கிறார் லூகா லகோனி.

அட்டகாசமான காகித விமானம்!

இங்கிலாந்தைச் சேர்ந்த யேட்ஸ், கார்ட் தம்பதியருக்குக் கடந்த ஆண்டு கிறிஸ் சார்லி என்ற ஆண் குழந்தை பிறந்தது. 8 வாரங்களில் சார்லிக்கு அரிய மரபணுக் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது. தசைகள் வலுவிழந்தன. மூளை சேதமடைய ஆரம்பித்தது. மருத்துவம் பார்ப்பதற்காக நன்கொடைகளைத் திரட்டிக்கொண்டு, அமெரிக்கா சென்றார் யேட்ஸ். செயற்கை சுவாசக் கருவிகளுடன் சார்லிக்கு மருத்துவம் செய்துவந்தார்கள் மருத்துவர்கள். தினமும் குழந்தையிடம் விரைவில் வீட்டுக்குச் சென்றுவிடுவோம் என்று பெற்றோர் கூறிவந்தனர். ஒருகட்டத்தில் சார்லியைக் குணப்படுத்த முடியாது என்ற நிலை வந்தபோது, தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக யேட்ஸும் கார்டும் கூறினார்கள். ஆனால் மருத்துவமனை அனுமதிக்கவில்லை. அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாடினார்கள். சார்லி இருக்கும் நிலையில் செயற்கை சுவாசக் கருவிகளுடன் வீட்டுக்கு அனுப்ப முடியாது என்று நீதிமன்றமும் கூறிவிட்டது. பலமுறை மேல்முறையீடு செய்தனர். இறுதியில் மருத்துவமனையிலேயே சார்லி நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டான். “நாங்கள் ஒரே ஒரு நாள் எங்கள் வீட்டில் குழந்தையை வைத்திருக்க விரும்பினோம். ஒரு பெற்றோருக்கு இந்த ஆசை கூட இருக்கக்கூடாதா? அவனுக்காக வாங்கி வைத்த தொட்டிலில் படுக்க வைத்து, புதுத்துணி போட்டு அழகு பார்த்து, இறுதி விடைகொடுத்திருப்போம். சார்லிக்காகப் பெறப்பட்ட நன்கொடையை, குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்கு வழங்க இருக்கிறோம்” என்கிறார் யேட்ஸ். குழந்தையால் பார்க்கவோ, கேட்கவோ முடியாமல் போன பிறகு எப்படி இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்க முடியும் என்கிறது மருத்துவமனை.

பெற்றோரின் ஆசையை நிறைவேற்றியிருக்கலாம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x