

உலக வர்த்தக அமைப்பு (டபிள் யூடிஓ) விவகாரத்தில் இரு நாடுகளுக்கிடையே உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பாராட்டி உள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் துறை செயலாளர் ஜோஷ் எர்னெஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (டிஎப்ஏ) அமல்படுத்துவது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒபாமா விரிவாக ஆலோசனை நடத்தினார். இதுவிஷயத்தில் சுமுகத் தீர்வு காண்பது தொடர்பான முன் முயற்சியில் மோடியின் தனிப்பட்ட தலைமைப் பண்பு பாராட்டும் வகையில் இருந்ததாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
உணவு மானிய ஒதுக்கீடு விஷயத் தில் இரு நாடுகளுக்கிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால் வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வளரும், வளர்ந்த நாடுகளின் சர்வதேச வர்த்தகத்துக்கான செலவு குறையும். மேலும் பல்நோக்கு வர்த்தக நடைமுறை வலுவடைவதுடன், வளரும் நாடுகள் தொடர்ந்து உணவு மானியத்தை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மியான்மர் சென்றிருந்த பிரதமர் மோடியும் ஒபாமாவும் தனியாக சந்தித்து பேசினர். மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஜி20 நாடுகள் மாநாட்டிலும் அவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் டிஎப்ஏ விவகாரத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தின்படி, உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஏதுவாக உலக வர்த்தக அமைப்பின் விதி முறையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும்.