Published : 08 Jul 2017 11:39 AM
Last Updated : 08 Jul 2017 11:39 AM

உலக மசாலா: நாயின் வேதனையான காலங்கள் மறந்து போகட்டும்!

உக்ரைனின் நிகோபோல் பகுதி யில் இயங்கிவரும் நாய்கள் காப்பகத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு உருக்கமான வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஒரு நாய் தவறி குழிக்குள் விழுந்து விட்டதாக வும் 3 ஆண்டுகளாகியும் வெளியே வர இயலாமல் தவிப்பதாகவும் சொன்னவுடன் எலினா அதிர்ச்சி யடைந்தார். உடனடியாக புகார் அளித்த லேனா வீட்டுக்குச் சென்றார். “குழிக்குள் இருந்த நாயின் வேதனையான குரலைக் கேட்டதும் கண்ணீர் வந்துவிட்டது. வெளியே கொண்டு வருவதற்கு முயற்சி செய்து பார்த்திருக்கி றார்கள். ஆனால் முடியவில்லை. லேனாவும் அருகில் இருப்பவர் களும் உணவுகளைக் கொண்டு வந்து குழிக்குள் போட்டுவிட்டுச் செல்வார்கள். அந்த உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு, இருட்டுக்குள் பயந்தபடியே வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தது நாய். நடுவில் அரசாங்கத்தின் அவசரப் பிரிவு அமைச்சகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். அவர்களால் வெளியே கொண்டுவர முடியவில்லை. பல்வேறு நிபுணர்களும் விலங்குகள் ஆர்வலர்களும் பார்த்தார்கள். அவர்களாலும் நாய்க்கு உதவ முடியவில்லை. ஒருகட்டத்தில் நாயைக் காப்பாற்றும் முயற்சியைக் கைவிட்டனர். சமீபத்தில் தனிமையில் இருக்கும் நாயின் வேதனையான குரலைக் கேட்டவுடன் லேனாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்து, காப்பாற்றும்படிக் கோரிக்கை வைத்தார். யாரோ ஒருவர் எங்கள் காப்பகத்தைத் தொடர்புகொள்ளச் சொல்லியிருக்கிறார். எங்கள் அமைப்பிலுள்ள சாஷா டுனாவ், உலகின் மிகச் சிறந்த நாய் மீட்பர்களில் ஒருவர். பல மணி நேரம் போராடி, இறுதியில் நாயைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்” என்கிறார் எலினா. “நாய் மிகவும் பயந்திருந்தது. அதன் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. அலெக்சாண்ட்ரா என்று பெயர் வைத்தேன். அது யாரைப் பார்த்தாலும் பயப்படுகிறது. குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார்” என்கிறார் லேனா.

நாயின் வேதனையான காலங்கள் மறந்து போகட்டும்!

அமெரிக்காவின் அலபாமாவில் வசிக்கும் 70 வயது மர்பி வில்சனும் 67 வயது லூசிண்டா மையர்ஸும் ஜூலை 25 அன்று திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகின்றன. வில்சனும் அவரது மனைவியும் 41 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். 2013-ம் ஆண்டு மனைவி இறந்து போனார். பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்லாமல் அவரது வாழ்க்கையில் வெறுமை சூழ்ந்துவிட்டது. அந்தத் துன்பத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அடிக்கடி தேவாலயம் செல்ல ஆரம்பித்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்துகொண்டு, தனியாக வாழ்ந்துவந்த லிண்டாவும் தேவாலயத்துக்கு வர ஆரம்பித்தார். இருவரும் பால்கனியில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். அடிக்கடி பார்த்துக்கொண்டாலும் பேசிக்கொண்டதில்லை. “ஒரு வாரம் என்னால் தேவாலயம் செல்ல முடியவில்லை. என்னைக் காணாமல் லிண்டா தவித்திருக்கிறார். மறுவாரம் என்னைப் பார்த்ததும் நீண்ட காலம் பழகியவரைப்போல விசாரித்தார். நட்பு சிதைந்துவிடக் கூடாது என்ற பயத்தில் திருமணம் குறித்த பேச்சைத் தள்ளிப் போட்டேன். ஆண்டுகள் கடந்தன. சமீபத்தில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு என் எண்ணத்தைச் சொல்லிவிட்டேன். உடனே சம்மதம் சொல்லிவிட்டார் லிண்டா. எங்களது நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது” என்கிறார் மர்பி வில்சன்.

காதலுக்கு வயது தடையில்லை!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x